சென்னை-மும்பை விமான கட்டணம் ‘கிடுகிடு’ உயர்வு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னையில் இருந்து மும்பை வர விமான கட்டணம் உயர்ந்துள்ளது.

மும்பை,

நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், தற்போது சர்வதேச நாடுகளுக்கு முழுமையான அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் உள்நாட்டுக்குள் விமானத்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில், விமான கட்டணமும் அதிகரித்து உள்ளது.

குறிப்பாக சென்னையில் இருந்து மும்பை வரவும், டெல்லி உள்ளிட்ட முக்கிய நகர பகுதிகளுக்கு செல்லவும் கொரோனாவிற்கு முன்பு இருந்ததை விட விமான கட்டணம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.

சென்னையில் இருந்து மும்பை வர ரூ.6,500-ஆக இருந்த கட்டணம் 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாகி ரூ.8,500-ஆகவும் உயர்ந்து விட்டது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, சென்னையில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்பவர்கள் இணைப்பு விமானமாக மும்பை, டெல்லி ஆகிய இடங்களுக்கு சென்று அங்கிருந்து பயணிக்கின்றனர்.

இதன் காரணமாக டெல்லி, மும்பைக்கு அதிக பயணிகள் செல்கிறார்கள். சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு தினமும் 20 விமானங்களும், டெல்லிக்கு 19 விமானங்களும் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு செல்பவர்களே பயணிக்கிறார்கள். தினமும் 40 ஆயிரம் பேர் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்கிறார்கள் என்றனர்.

மேலும் விமானத்திற்கு தேவையான எரிபொருளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதே இந்த திடீர் விமான பயணிகளின் கட்டண உயர்வுக்கு காரணம் என விமான முன்பதிவு ஏஜென்சிகள் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

Source: https://www.dailythanthi.com/News/India/2022/04/03045451/ChennaiMumbai-flight-ticket-fare-hike.vpf