சென்னை: சென்னை பாண்டி பஜாரில் ஓவியம் வரையும் 20 வயது இளைஞரின் திறமையை கண்டு தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார்.
66 வயது தொழிலதிபரான ஆனந்த் மகிந்திரா ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார். சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களை தட்டிக் கொடுத்து ஊக்கமளிப்பார். பல கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்தாலும் அவரிடம் பணிவு என்பது கூடவே பிறந்தது போலும்!
யார் ஒருவருக்கு சிறிய அளவில் திறமை இருந்தாலும் அது இவரின் கண்களில் பட்டுவிட்டால் உடனே வைரலாகி விடும். சமூகவலைதளங்களில் போட்டு பாராட்டி விடுவார். #MondayMotivation என்ற ஹேஷ்டேக்கில் திங்கள்கிழமை தோறும் சில வீடியோக்களை பகிர்ந்து வருகிறார் ஆனந்த் மகிந்திரா.
உங்கள் வாகனம் மட்டுமா.. அங்கே தமிழ் அல்லவா இருக்கிறது.. ஆனந்த் மகிந்திராவிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில்
விடுமுறை
இது சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து புதிதாக திங்கள்கிழமைகளில் தங்கள் பணியை தொடங்குவோருக்கு உந்துதலாக இருப்பதாக அவருடைய பின்தொடர்பாளர்கள் எப்போதும் ஆனந்த் மகிந்திராவின் ட்வீட்டை படிப்பர். அந்த வகையில் நேற்றைய தினம் ஆனந்த மகிந்திரா ஒரு வீடியோவை போட்டுள்ளார்.
சென்னை பாண்டி பஜார்
அது சென்னை பாண்டி பஜாரில் 20 வயது ஓவியரை பற்றிய செய்திதான். இவரது பெயர் சுரேந்தர். இவரது திறமைகளை ஆங்கில நாளிதழின் செய்தியை பார்த்த ஆனந்த் மகிந்திரா அந்த இளைஞரை பாராட்டியுள்ளார். அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் உறுதிப்படுத்துதல்+ புத்திசாலித்தனம்+ பொறுமை= வெற்றி என்பதை பின்பற்றும் தைரியமான இளைஞர் இவர்.
லாபம்
லாபம் கொழிக்கும் தொழில்களில் கால் பதிக்க வேண்டும் என்ற ஒரு அழுத்தம் இருந்த போதிலும் அவர் இந்த கலையுடன் ஆர்வமாக பின்னி பிணைந்திருப்பதை நான் பாராட்டுகிறேன். அவருக்கு எனது புகைப்படத்தை அனுப்பவுள்ளேன். அவர் மூலம் எனக்கு ஒரு உருவப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளேன் என்றார்.
விஷுவல் கம்யூனிகேஷன்
சுரேந்தர் இறுதியாண்டு விஷுவல் கம்யூனிகேஷன் படித்து வருகிறார். பன்னிரெண்டாம் வகுப்பில் 600க்கு 523 மதிப்பெண்கள் எடுத்துள்ளாராம். உயர் படிப்புக்கு பொறியியல் அல்லது மருத்துவத்தை தேர்வு செய்வார் என அனைவரும் நினைத்திருந்த நிலையில் அவர் கலையை விட்டு விலக விரும்பாததால் விஷுவல் கம்யூனிகேஷன் தேர்வு செய்துள்ளார்.
பணம்
இவர் பாண்டி பஜாரில் கடந்த இரு வாரங்களாக ஓவியம் வரையும் பணியை செய்து வருகிறார். பிளாக் அன்ட் வொயிட் படமாக இருந்தால் 10 நிமிடங்களும் கலர் படமாக இருந்தால் 20 நிமிடங்களையும் எடுத்துக் கொள்கிறார். பாண்டி பஜாரில் ஷாப்பிங் செய்து வருவதற்குள் இவர் படத்தை முடித்து விடுகிறார். அதன் மூலம் கிடைக்கும் பணத்தை தனது சொந்த செலவிற்கும் படிப்பிற்கும் பயன்படுத்துகிறார். இவரது தாய் தந்தை பிரிந்து விட்டார்கள். இவர் தந்தையுடனும் சகோதரனுடனும் வசித்து வருகிறார். தந்தை கூலித் தொழிலாளியாவார்.
Source: https://tamil.oneindia.com/news/chennai/anand-mahindra-praises-20-years-old-artist-who-belongs-to-chennai-453969.html