பெண் போலீஸை ஆபாசமாக பேசிய இளைஞர் சென்னையில் கைது – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
போக்குவரத்து விதியை மீறி சாலையில் சென்றவரை கேள்விகேட்ட பணியில் பெண் காவலரை தரக்குறைவாக பேசி, பணி செய்ய இடையூறு செய்த இளைஞர் சிறையில் அடைப்பு. 

சென்னை சோழிங்கநல்லூர் சிக்னலில் ஆயுதபடை பெண் காவலர் அபர்ணா(28) போக்குவரத்து சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் சிவப்பு சிக்னல் விழுந்தபின்பு சாலையை கடக்க முயன்றுள்ளார். எதிரே வாகனங்கள் சாலையில் சென்றதால் அந்த நபர் சாலையின் மைய பகுதியில் இருசக்கர வாகனத்துடன் சிக்கினார். இதனால் அங்கு சிறிது நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டது.

Also Read: அழகுநிலையத்தில் வேலைப் பார்க்கும் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு – குன்றத்தூரில் பயங்கரம்

இதை பார்த்த அங்கு பணியில் இருந்த பெண் காவலர் அபர்ணா ஏன் சிவப்பு சிக்னல் விழுந்த பிறகு சாலையை கடக்க முயன்றீர்கள் போக்குவரத்து விதியை மீறியதால் மற்ற வாகனங்களும் போக முடியாமல் சாலையில் சிக்கி தவிக்கிறது என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் காவலரை அந்த நபர் ஒருமையில் பேசி தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். பொதுமக்கள் மத்தியில் திட்டியதால் மனவுளைச்சலுக்கு ஆளான பெண் காவலர் அருகில் உள்ள செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் அந்த நபரை பிடித்துகொடுத்துள்ளார்.

பின்னர் போலீசார் விசாரித்ததில் அவர் சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த 28-வயதான ராம்குமார் என்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.  பணியில் இருந்த பெண் காவலரை தரக்குறைவாக பேசியும் பணியை செய்யவிடாமல் தடுத்ததாக கூறி ராம்குமார் மீது செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்:  ப.வினோத்கண்ணன் 

Published by:Ramprasath H

First published:

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-district-chennai-youth-who-verbally-abuse-traffic-woman-police-arrested-hrp-726803.html