`மெட்ராஸ்’ பட பாணியில் சுவர் பிரச்னை: கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகர்; வழக்கறிஞர் கைது – Puthiya Thalaimurai

சென்னைச் செய்திகள்

பிராட்வே பேருந்து நிலையத்திற்குள் திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த வழக்கறிஞரை, நீதிமன்றத்திலேயே வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்திற்குள் பதுங்கி இருந்த அவரை கைது செய்து தற்போது காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் சவுந்தரராஜன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடையோரை கண்டறிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக கொலையாளிகள் ஆட்டோவில் வந்து தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றினர். அந்த ஆட்டோ எண்ணை வைத்து அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அதிமுக பிரமுகர் கணேசன், அவரது மகன் தினேஷ் குமார், மேலும் இன்பா, கார்த்திக், குமரேசன் ஆகியோர் செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-வதில் நேற்று சரணடைந்தனர். வருகிற 18-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

image

Advertisement

இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த வியாசர்பாடியைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவரையும் எஸ்பிளனேடு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக பிரமுகர் கணேசனின் மற்றொரு மகனான சதீஷ்தான், இக்கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டது என்பதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

[embedded content]

அவரை செல்போன் டவர் லொகேஷனை வைத்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். செல்போன் டவர் லொகேஷன்படி, செங்கல்பட்டு நீதிமன்றத்திற்குள் அவர் இருப்பதுபோல காட்டி உள்ளது. தனிப்படை போலீசார் அங்கு சென்று பார்த்த போது நீதிமன்றத்திற்குள் அவர் பதுங்கி இருந்தது தெரிந்தது. உடனே போலீசார் செங்கல்பட்டு மாவட்ட நீதிபதி உத்தரவை பெற்று, நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து சதீஷை கைது செய்தனர். விசாரணையில் சதீஷ் வழக்கறிஞர் என்றும், 5 பேர் சரண் அடைய வந்த போது நீதிமன்றத்திற்குள் பதுங்கி இருந்ததும் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு கைதான சதீஷை கொண்டு சென்று எஸ்பிளனேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

image

கடந்த மாதம் சரண் அடைந்துள்ள அதிமுக பிரமுகரான கணேசனுக்கும், கொலை செய்யப்பட்ட சவுந்திரராஜனுக்கும் முன் விரோதம் இருந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சுவர் விளம்பரம் எழுதுவதில் கணேசனுக்கும் சவுந்தரராஜனுக்கும் மோதல் நடந்துள்ளது. சவுந்தரராஜன் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் கணேசன் கொலை மிரட்டல் மீது புகார் கொடுத்தார். இதனால் மோதல் முற்றி கொலையாக மாறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

[embedded content]

சுவர் விளம்பரம் செய்வதில் ஏற்பட்ட பிரச்னையில் மெட்ராஸ் பட பாணியில் நடந்தேறிய இக்கொலை சம்பவம் தலைநகர் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்தி: போக்சோ வழக்கில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரியை கைது செய்ய பெற்றோர் கோரிக்கை

Source: https://www.puthiyathalaimurai.com/newsview/134177/Lawyer-arrested-in-Murder-of-DMK-functionary