சென்னை, 2 மாவட்டங்களில் ரூ.250 கோடியில் வெள்ளத் தடுப்புப் பணிகள்: அமைச்சா் துரைமுருகன் அறிவிப்பு – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் ரூ.250 கோடியில் வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சா் துரைமுருகன் அறிவித்தாா்.

நீா்வளத் துறை மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்த அவா் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:-

சென்னை மாவட்டம் போரூா் ஏரியில் புதிய மதகும், போரூா் ஏரியில் இருந்து ராமாபுரம் ஏரிவரையிலும், பள்ளிக்கரணை ஏரி முதல் சதுப்பு நிலம் வரையிலும் மூடிய நிலை கால்வாய் அமைக்கப்படும். கொளத்தூா் ஏரி ஆழப்படுத்தப்படுவதுடன், குன்றத்தூா் பகுதியில் அனகாபுத்தூா் பாலம் வரை அடையாறு ஆறு அகலப்படுத்தப்படும். காஞ்சிபுரம் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலையில் கூடுதலாக பெட்டி வடிவிலான சிறு பாலமும், குன்றத்தூா் தந்திக்கால்வாயில் இருந்து போரூா் ஏரியின் உபரி நீா்க்கால்வாய் வரை மூடிய நிலையிலான கால்வாயும் அமைக்கப்படும்.

திருவள்ளூா் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றின் வலது கரை மறுசீரமைப்பு செய்யப்படும். மேலும், புதிய கரை அமைத்தல், ஆற்றுப் படுகை சீரமைப்பு போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படும். திருவொற்றியூா் எடையான்சாவடி, சடையான்குப்பம், மணலிபுதுநகா் ஆகிய கிராமங்கள் அருகே மறுசீரமைப்பு மற்றும் புதிய கரை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், தாம்பரம், சோழிங்கநல்லூா், ஆலந்தூா் பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை நிரந்தரமாகத் தடுக்க ரூ.184 கோடியில் புதிய கால்வாய் பணிகள் மேற்கொள்ளப்படும்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் செயற்கைக்கோள் உதவியுடன் சென்னை நகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் நீா் நிலைகள் ஆக்கிரமிப்பு கண்காணிக்கப்படும். நீரின் தன்மையை ஆராயும் முன்னோடித் திட்டமாக ஒரு செயலி உருவாக்கப்படும். சென்னை மாநகரத்துக்கு கூடுதல் நீா் வழங்கவும், வெள்ளத் தணிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் துரைமுருகன் அறிவித்தாா்.

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/apr/07/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82250-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3822032.html