ரூ.2,000 கோடி கடனில் சென்னை மாநகராட்சி: என்ன செய்யப்போகிறார் மேயர் பிரியா? – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை : சென்னை மாநகராட்சி ரூ.2 ஆயிரம் கோடி கடனில் உள்ள நிலையில் மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் நாளை மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

சென்னை மாநகராட்சியில் 2011 -மக்கள் தொகையில் கணக்கெடுப்பின் படி 61 லட்சம் மக்கள் இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 80 லட்சமாக உயர்ந்து உள்ளது. நகர்புற வளர்ச்சி காரணமாக சென்னை நோக்கி வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்த வேண்டிய நிலையில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் உள்ளது.

கடந்த 6 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தால் சென்னை மாநகராட்சி ஆணையர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில் 6 ஆண்டுகள் கழித்து புதிதாக தேர்வாகியுள்ள சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் 9-ம் தேதி 2022 – 2023 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். 2 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ள சென்னை மாநகராட்சியின் நிதி நிலையை சரி செய்ய மேயர் என்ற செய்யப்பபோகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னையில் மாநகராட்சி ஆண்டுக்கு ரூ. 6300 கோடி மதிப்பீட்டில் வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்கிறது. இதில் வரவு ரூ.2935 கோடியாகவும் செலவு ரூ. 3481 கோடியாகவும் உள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி முதன்மையான வருவாய் ஆக உள்ளது. ஆண்டுக்கு ரூ.700 கோடி சொத்து வரி வசூல் செய்யப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக ரூ.500 கோடி தொழில் வரியாக கிடைக்கிறது. மேலும் தொழில் உரிமக் கட்டணம், வணிக வளாகம் வாடகை உள்ளிட்ட மற்ற வகையில் மொத்தம் ரூ.1275 கோடி வருவாய் கிடைக்கிறது.

செலவுகளில் பணியாளர்களின் ஊதியத்திற்கு மட்டும் ரூ.1700 கோடி செலவு செய்யப்படுகிறது. இதைத்தவிர்த்து நிர்வாக செலவுகள், மூலதன செலவுகள் என்று செலவுகள் அதிகரித்து கொண்டேதான் உள்ளது. கடந்த நிதியாண்டில் சென்னை மாநகராட்சி ரூ.500 கோடி நிதி பற்றாக்குறையில் இருந்தது. மேலும் 2 ஆயிரம் கோடி கடனும் இருந்தது. இந்தக் கடனுக்கு மட்டும் சென்னை மாநகராட்சி ரூ.167 கோடி வட்டி கட்டி வந்தது.

இந்நிலையில் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் நிதி நிலையை சீரமைக்க சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ‘சென்னை மாநகராட்சிக்கு முக்கிய வருவாய் ஆக இருப்பது சொத்துவரி ஆகும். தற்போது தமிழக அரசு சொத்து வரியை அதிகரித்து உள்ளதால் கூடுதலாக ரூ.500 கோடி வருவாய் வர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள பல கட்டிடங்களுக்கு குறைவாக வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜிஐஎஸ் முறையில் இந்த கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு சரியாக சொத்து வரி கணக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலமும் வருவாய் அதிகரிக்கும். மாநகராட்சி பகுதிகளில் கேபிள் பதித்துள்ள பல தனியார் நிறுவனங்கள் சரியான வாடகை செலுத்தாமல் உள்ளனர். இதை சீர் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. இதை எல்லாம் செய்தால் மட்டுமே சென்னை மாநகராட்சியின் வருவாய் உயர வாய்ப்பு உள்ளது.

சென்னை மாநகராட்சி தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களான சென்னை மாநகர கூட்டாண்மை திட்டம், பள்ளிகளை மேம்படுத்தும் சிட்டிஸ் திட்டம் (CITIES), ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் கடன் வாங்கிதான் செயல்படுத்தப்பட்டு வருகிறதன. சிங்கார சென்னை 2.0 திட்டம் மட்டுமே தமிழக அரசின் நிதியில் செயல்படுத்தப்படுகிறது.

எனவே இதற்கு மேலும் கடன் வாங்கி திட்டங்களை செயல்படுத்தாமல் சென்னை மாநகராட்சியின் வருவாயை அதிகரித்து அந்த நிதி மூலம் புதிய திட்டங்களை செயல்படுத்துவதுதான் சரியாக இருக்கும்

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/786078-2000-crore-loan-in-chennai-corporation-mayor-to-present-the-first-budget-in-after-six-years.html