சென்னை ஐஐடி புதிய சாதனை; மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்

முழங்கால் மேல்பகுதியை இழந்த ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது பன்மைய (polycentric) செயற்கை முழங்காலை, சென்னையில் உள்ள இந்திய தொழில் நுட்பக் கழகம் (ஐஐடி) அறிமுகம் செய்துள்ளது.

கதம் என்று அழைக்கப்படும் இந்த மேட் இன் இந்தியா தயாரிப்பு, சொசைட்டி ஃபார் பயோமெடிக்கல் டெக்னாலஜி (SBMT) மற்றும் மொபிலிட்டி இந்தியா ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்ட, முழங்காலுக்கு மேல் உள்ள செயற்கை உறுப்புக்கான பாலிசென்ட்ரிக் முழங்கால் ஆகும்.

முழங்காலின் மேல்பகுதி வரை இழந்தவர்கள் எளிதாக நடக்க செய்வதை ‘கதம்’ சாத்தியமாக்கி உள்ளது. நடை மட்டுமின்றி சமூகப் பங்கேற்பு, கல்வி பயிலுதல், வாழ்வாதார வாய்ப்புகள், ஒட்டுமொத்த உடல்நலம் ஆகியவற்றின் மூலம் பயனர்களின் வாழ்க்கைத் தரமும் மேம்படுகிறது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த ‘கதம்’ இன்று தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆணையர் ஜானி டாம் வர்கீஸ், ஐஏஎஸ், சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, சென்னை ஐஐடி மறுவாழ்வு ஆராய்ச்சி ஆசிரிய தலைவரான பேராசிரியர் சுஜாதா ஸ்ரீனிவாசன், இதர ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் ஆகியோர் முன்னிலையில் சென்னையில் உள்ள ஐஐடி வளாகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த செயற்கை முழங்காலானது முழங்காலின் மேல்பகுதி வரை துண்டிக்கப்பட்ட பிறகு எஞ்சியிருக்கும் குறுகிய/ நீண்ட மூட்டுகளுக்கு ஏற்றதாக உள்ளது. பாலிசென்ட்ரிக் 4-கம்பிகளுடன் கூடிய முழங்கால் மூட்டு இருப்பது பயனர்கள் நெகிழ்வு- நீட்டிப்புக்கு ஏற்றதாக உள்ளது.

அதிக வலிமை கொண்ட பொருட்களால் ஆனது: அலுமினியம் அலாய்- Al 6061 T6, எவர்சில்வர்- SS304 பயனரின் தேவையைப் பொறுத்து நிலைத்தன்மையை சரிசெய்து கொள்ள முடியும்.

வெவ்வேறு நடை வேகங்களுக்கு ஏற்ப உராய்வு கட்டுப்பாட்டை சரிசெய்யும் வசதி 4-கம்பிகளுடனான வடிவியல் (இந்திய காப்புரிமை எண். 338006) சீரற்ற நிலப்பரப்பு, சீரமைக்கப்படாத தரை ஆகியவற்றில்கூட உறுதியான நிலைத்தன்மையை வழங்குகிறது.

அதிகபட்ச முழங்கால் வளைவை 160 டிகிரி அல்லது அதற்கு மேலும்கூட அளிக்கிறது. (அதிகபட்ச வரம்பு சாக்கெட்டில் உள்ளது) வெவ்வேறு நிலப்பரப்புகளிலும், செங்குத்தான சரிவுகளிலும் பயனர்கள் நடத்து செல்லும்போது சோதனை மேற்கொள்ளப்பட்டது.

எல்லாவற்றையும் விட ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.50 ஆயிரத்துக்குள்ளாகவே கிடைக்கும் என்பது தான் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது. இதனால் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் துறை ஆணையர் ஜானி டாம் வர்கீஸ் ஐ.ஏ.எஸ் பேசியதாவது:

மாற்றுத்திறனாளி ஒருவரின் உலகத்தை மற்றவர்களுடன் இணைப்பது தொழில்நுட்பம்தான். அனைத்து தரப்பு மக்களுக்கும் தொழில்நுட்பம் எவ்வாறு திருப்பத்தை ஏற்படுத்துகிறது என்பதே தனிச்சிறப்பாகும். கதம் என்பது அத்தகைய கண்டுபிடிப்புகளில் ஒன்று.

சென்னை ஐஐடி-யின் R2D2 வெளியிடும் இதுபோன்ற முன்னோடித் தயாரிப்புகள் அனைத்தும் தொழில்நுட்பத்தை மேலும் அணுகக் கூடியதாக ஆக்குவதுடன் குறைந்த விலையிலும் கிடைக்க செய்யும்.

செயற்கை முழங்கால்களை பயன்படுத்துவோரின் வசதிக்காக ‘கதம்’ செயற்கை முழங்காலில் கீல்மூட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. பேருந்துகள், ஆட்டோக்களில் பயணிக்கையில் எளிதாக அமர்ந்து செல்லவும், நடக்கும்போது செயற்கை முழங்காலை 160 டிகிரி மடக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

நீடித்து நிற்கும் வகையில் உறுதி வாய்ந்த எவர்சில்வர் மற்றும் அலுமினியம் அலாய், கடினமான குரோம் பூசப்பட்ட EN8 பின்கள், அதிக அயர்வு தாங்கு காலம் உடைய பாலிமர் சுழல்உருளை ஆகியவற்றை கொண்டு இந்த செயற்கை முழங்கால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் துறை ஆணையர் ஜானி டாம் வர்கீஸ் ஐ.ஏ.எஸ் பேசினார்.

இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறியதாவது:

சுகாதாரம், மருத்துவம் ஆகியவற்றை தொழில்நுட்ப ரீதியாக சந்திக்க வேண்டியது ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு அவசியமானது. இந்த தேவையை நியாயப்படுத்தும் வித்த்தில் மற்றொரு உதாரணமாக கதம் அமைந்துள்ளது.

எங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகள் அனைத்தும் மனிதகுலத்துக்கு பயனளிக்கும் தயாரிப்புகளாக மாற்றப்படுவதில் சென்னை ஐஐடியைச் சேர்ந்த எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கதம் விலை மலிவானது என்றாலும் ஐ.எஸ்.ஓ.10328 தரம், 30 ஆயிரம் சுழற்சி அயர்வு தாங்கு காலம் (fatigue testing) என உயர்தரம் மற்றும் செயல் திறன் உடையது. நிலைத்த தன்மையை வழங்குவதுடன், தடுமாறும் அபாயத்தையும் குறைக்கிறது. சீரற்ற நிலப்பரப்புகளில் பயன்படுத்த உகந்ததாக இதன் வடிவியல் அமைந்துள்ளது. இவ்வாறு ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறினார்.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/chennai-iit-has-introduced-prosthetic-knee/articleshow/90730540.cms