சென்னை புறநகரில் நடைபெறும் சென்னை எல்லைச்சாலை பணிகளை இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் பார்வையிட்டார்.! – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை புறநகரில் ஜப்பான் நிதியுதவியுடன் நடைபெறும் சென்னை எல்லைச்சாலை கட்டம்-1 பணிகளை இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் பார்வையிட்டார். ஜப்பான் அரசு நிதி உதவியில் செயல்படுத்தப்படும் சென்னை எல்லைச் சாலையின் பகுதி-I பணிகளை தச்சூரில், இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் மேதகு சுசுகி சட்டோஷி அவர்கள், 07.04.2022 அன்று பார்வையிட்டார்.

தமிழக அரசின் நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, சென்னை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் குறிப்பாக பெருகி வரும் தொழில் நிறுவனங்களின் கனரக வாகனங்கள் துறைமுகத்துடன் இணைக்கும் வகையில் சென்னை எண்ணூர் காட்டுப்பள்ளி முதல் தச்சூர், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சிங்கப்பெருமாள் கோவில் வழியாக வரை சுமார் 133.45 கி.மீ. நீள சென்னை எல்லைச் சாலை அமைக்க முடிவெடுத்து அதனை 5 பகுதிகளாக பிரித்துச் செயல்படுத்தத் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதில் பகுதி-1 பணியாக எண்ணூர் காட்டுப்பள்ளி முதல் தே.நெ.16ல் தச்சூர் வரையிலான 21.7 கி.மீ நீளச் சாலை மற்றும் சென்னை வெளிவட்டச் சாலையுடன் இணைக்கும் 3.7 கி.மீ நீளச் சாலை என மொத்தம் 25.40 கி.மீ நீளத்திற்கு புதிய  பசுமைச் சாலை அமைக்க ரூ.2673.42 கோடிக்கு ஜப்பான் பன்னாட்டு நிதியத்தின் உதவியில் செயல்படுத்திட அரசு அனுமதித்துள்ளது. மேற்படி திட்டத்தின் கீழ் 8 பெரிய பாலங்கள், 7 சிறு பாலங்கள், 4 சாலை  கீழ்பாலங்கள் / மேம்பாலம், ஒரு பல்வழி பரிமாற்ற மேம்பாலம், இரு இரயில்வே மேம்பாலம் மற்றும் 4 கனரக வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவை எடுத்துக் கொள்ளப்பட்டுப் பிரிக்கப்பட்ட 6 வழித்தடச் சாலை மற்றும் இருபுறமும் இருவழித்தடச் சேவைச் சாலையுடன் அமைக்கப்பட உள்ளது.

இச்சாலைப்பணி திருவாளர்கள் டாடா-ஐஏவி வாஜ் கூட்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் ஜப்பான் தூதரக பொது அதிகாரி திரு. தாக மசாயுக்கி, ஜப்பான்  நிதியத்தின் இந்தியாவிற்கான முதன்மை பிரதிநிதி திரு. சைட்டோ மிட்சுனோரி, சென்னை எல்லைச் சாலை திட்ட இயக்குநர் டாக்டர்.க.பாஸ்கரன்,இ.ஆ.ப., தலைமைப் பொறியாளர் திரு.எம்.கே.செல்வன் மற்றும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் திருமதி.எம்.விஜயா, பொது மேலாளர் திரு.எம்.ஞானசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

Source: https://www.dinakaran.com/news_detail.asp?Nid=756249