சென்னை மாநகராட்சியில் புதிதாக 3 டயாலிசிஸ் மையங்கள்: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை மாநகராட்சியில் புதிதாக 3 டயாலிசிஸ் மையங்கள் தொடங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
சென்னை மாநகராட்சியின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மேயா் ஆர்.பிரியா முன்னிலையில் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவா் சா்பஜெயாதாஸ் நரேந்திரன் இன்று தாக்கல் செய்தார். சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் கருப்புச்சட்டை அணிந்து பட்ஜெட் கூட்டத்துக்கு வந்தனர். தொடர்ந்து சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாநகராட்சி அதிமுக உறுப்பினர்கள் பட்ஜெட்டை புறக்கணித்து வெளிநடப்பும் செய்தனர். சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
அதில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பாலின சமத்துவத்தை மாணவர்கள் புரிந்துகொள்ள பாலின குழுக்கம் அமைக்கப்படும். 
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் விலையில்லா நாப்கின் வழங்கப்படும். இதற்காக ரூ.23.66 கோடி ஒதுக்கீடு. 
28 பள்ளிகள் ஸ்மார்ட் பள்ளிகளாக தரம் உயர்த்த ரூ.76.27 கோடி நிதி ஒதுக்கீடு. 
சென்னை மாநகரம் முழுவதும் கொசு ஒழிப்புக்காக ரூ.4.62 கோடி நிதி ஒதுக்கீடு.
சென்னை மாநகராட்சியில் புதிதாக 3 டயாலிசிஸ் மையங்கள் தொடங்கப்படும். அனைத்து மண்டலங்களிலும் படிப்படியாக டயாலிசிஸ் மையங்கள் ஏற்படுத்தப்படும். 
மாணவிகள் பாதுகாப்புக்கான ரூ.5.47 கோடியில் மாநகராட்சி பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். 
சென்னை 2.0 திட்டத்தில் மாநகரை அழகுப்படுத்த 26 இடங்களில் நீரூற்றுகள் அமைக்க ரூ.1.29 கோடி ஒதுக்கீடு.
சாலைகள், தெருக்களின் பெயர்களை டிஜிட்டல் முறையில் மாற்றப்படும்-ரூ.8.43 கோடி ஒதுக்கீடு.
சென்னையில் உள்ள 1,000 பேருந்து நிழற்குடைகள் நவீனமாக மேம்படுத்தப்படும். 
சென்னையில் உள்ள பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்களை பராமரிக்கவும், மேம்படுத்தவும் ரூ.16.35 கோடி ஒதுக்கீடு.
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாநகர் முழுவதும் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும் என்பன உள்ளிட்டவைகள் அடங்கும்.

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/apr/09/new-3-dialysis-centers-in-chennai-corporation-chennai-corporation-budget-announcements-3823813.html