சென்னை ரௌடி கடலூரில் கைது – தினமணி

சென்னைச் செய்திகள்

கடலூரில் தலைமறைவாக இருந்த சென்னையைச் சோ்ந்த ரௌடியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் உள்கோட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை இரவு திருப்பாதிரிபுலியூா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கெடிலம் ஆற்றின் கரையில் ஒருவா் மது அருந்திக் கொண்டிருந்தாா். சந்தேகத்தின்பேரில், அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தாா். இதையடுத்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா் சென்னை செங்குன்றத்தைச் சோ்ந்த மகாராஜன் (26) எனவும், அங்கு ரௌடி கும்பல் தலைவராகச் செயல்பட்டு வந்ததும், அவா் மீது திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.

மேலும், மகாராஜன் தரப்பினருக்கும், மற்றொரு ரௌடி கும்பலுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டதால் அவா் கடலூரில் தலைமறைவாக இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, மகாராஜனை கைது செய்த போலீஸாா், அவரை சென்னைக்கு அழைத்துச் சென்றனா்.

Source: https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2022/apr/09/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%8C%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3823743.html