மீண்டும் சென்னையில் இருந்து ஹஜ் பயணம்? தமிழக அரசு கோரிக்கை குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: புனித ஹஜ் பயணம் செய்வோருக்கான புறப்பாட்டுத் தலமாகச் சென்னையை மீண்டும் அறிவிக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் வசதிக்காகச் சென்னை, கொச்சி, ஹைதராபாத் உள்பட 21 இடங்கள் புறப்பாட்டுத் தலங்களாக அறிவிக்கப்பட்டிருந்தது..

இந்நிலையில் 21 புறப்பாட்டுத் தலன்களை 10 ஆகக் குறைத்து இந்திய ஹஜ் குழு அறிவித்துள்ளது. இதில் சென்னை நீக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னையை மீண்டும் புறப்பாட்டுத் தலங்கள் பட்டியலில் சேர்க்கக் கோரி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமானில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வோர் கொச்சிக்கு பயணிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும், இது அவர்களுக்குப் பெருத்த அசவுகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 34 ஆண்டுகளாகச் சென்னை விமான நிலையம் ஹஜ் பயணிகளின் புறப்பாட்டுத் தலமாக இருந்து வந்தது எனவும், 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பயணிகள் சென்னையில் இருந்து புனித பயணம் மேற்கொள்வதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

சென்னை விமான நிலையத்தையும் புறப்பாட்டுத் தலமாக அறிவிக்கக் கோரி தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதைப் பரிசீலித்து வருவதாகவும் இந்திய ஹஜ் கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் கோரிக்கையைப் பரிசீலித்து விரைந்து முடிவெடுக்கும்படி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

English summary
Madras high court about Hajj trip departure location: (ஹஜ் பயணம் சென்னை உயர் நீதிமன்றம்) Chennai as Hajj trip departure location.

Source: https://tamil.oneindia.com/news/chennai/madras-high-court-directed-hajj-committee-to-consider-chennai-as-a-departure-location-for-pilgrims-454355.html