மாணவி பாலியல் பலாத்கார வழக்கு: சென்னை ஐ.ஐ.டி. ஆஸ்பத்திரி டாக்டரிடம் போலீசார் விசாரணை – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் சென்னை ஐ.ஐ.டி. ஆஸ்பத்திரி டாக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி ஒருவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பி.எச்.டி. படித்தார். அவர் ஐ.ஐ.டி. விடுதியில் தங்கி இருந்தார். இவர் படித்த காலத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இவர் மேற்கு வங்க மாநிலம் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்.

கடந்த 2020-ம் ஆண்டு இவர் படிப்பை முடித்து விட்டார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவர் சென்னை கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பரபரப்பு புகார் மனு கொடுத்தார்.

கோட்டூர்புரம் போலீசார் பாலியல் துன்புறுத்தல், மானபங்கம் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மாணவியிடம் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. அந்த வாக்கு மூலத்தில் 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதன்படி 2 ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் உள்ளிட்ட 8 பேர் மீதும் வழக்கு போடப்பட்டது.

கற்பழிப்பு சட்டப்பிரிவு

குற்றம் சாட்டப்பட்ட 8 பேரில் 2 பேர் வெளிநாடு சென்றுவிட்டதால், மீதி 6 பேருக்கு சம்மன் அனுப்பி கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இவர்களில் மாணவியின் வாக்குமூலப்படி முக்கிய முதல் குற்றவாளி மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கிங்சூப்தேப்சர்மா என்பவர் ஆவார். இந்த வழக்கில் கற்பழிப்பு சட்டப்பிரிவும், தீண்டாமை ஒழிப்பு சட்டப்பிரிவும் புதிதாக சேர்க்கப்பட்டது. வழக்கு விசாரணை கோட்டூர்புரம் உதவி போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியனின் தலைமையில் மாற்றப்பட்டது.

இதையொட்டி கடந்த மாதம், தனிபோலீஸ் படை அமைக்கப்பட்டு, முக்கிய குற்றவாளி கிங்சூப்தேப்சர்மா மேற்கு வங்க மாநிலத்தில் கைது செய்யப்பட்டார். அவரை மேற்குவங்க மாநிலம், டைமண்டு ஹார்பர் மாவட்ட கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அவரை சென்னை அழைத்துவர போலீசார் அனுமதி கேட்டார்கள். அதற்கு அனுமதி மறுத்த கோர்ட்டு, அவரை ஜாமீனில் விடுவித்து விட்டது.

டாக்டரிடம் விசாரணை

அவரது ஜாமீனை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டில் கோட்டூர்புரம் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கில் கூடுதல் ஆதாரங்களை சேகரிக்க தினமும் முக்கிய சாட்சிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு அளித்த சிகிச்சை விவரங்கள் குறித்து ஐ.ஐ.டி. ஆஸ்பத்திரி தலைமை டாக்டரிடமும் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

Source: https://www.dailythanthi.com/News/State/2022/04/09003149/Student-rape-case-Chennai-IIT-Police-investigation.vpf