சென்னை: சிஎம்டிஏ வரம்புக்குள் செங்கல்பட்டு ஊராட்சிகள் – சாதக, பாதகம் என்ன? – BBC.com

சென்னைச் செய்திகள்
  • பிரசன்னா வெங்கடேஷ்
  • பிபிசி தமிழுக்காக

சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிப் பகுதிகளை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும நிர்வாகத்துடன் இணைக்க, உள்ளாட்சி நிர்வாகிகள் அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் என்ன சாதகம், என்ன பாதகம்? விரிவாக அலசுகிறது இந்த கட்டுரை.

செங்கல்பட்டு மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளையும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.,

அதில், “சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றியம், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வண்டலூர், மண்ணிவாக்கம், நெடுங்குன்றம், ஊரப்பாக்கம், கிளம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் சென்னை வளர்ச்சி குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், சென்னை வளர்ச்சி குழுமத்தின் கட்டுப்பாட்டில் வந்தால் ஊராட்சிகளின் ‘நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும்’, எனவே அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்புக் கூட்டம் நடத்தி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் எல்லைகளை, செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்த ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவைக்க வேண்டும்”, என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

ஏற்கெனவே சிஎம்டிஏ விரிவாக்க எல்லைக்குள் இருக்கும்பல ஒன்றியங்களில் இருக்கக்கூடிய ஊராட்சிகளில் முறையாக குப்பைகளை கையாளும் மேலாண்மை, ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகளில் தொடர்ச்சியாக கழிவுநீர் கலப்பது, காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் என எந்தவொரு வளர்ச்சியும் பெரிதாக ஏற்படாமல் மக்கள் மிகுந்த அவதி அடைந்து வருவதாக புகார்கள் எழுகின்றன.

இந்த நிலையில், போதிய வளர்ச்சிப் பணிகளை நோக்கி முன்னேறாமல், சிஎம்டிஏ விரிவாக்கத்துக்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளையும் அதன் வரம்புக்குள் கொண்டு வருவதால் பெரிய பயன் இருக்காது, என்கின்றனர் செங்கல்பட்டு மாவட்ட மக்கள்.

சிம்டிஏ

பட மூலாதாரம், @CMDA_Official

மக்கள் கருத்து என்ன?

ஊராட்சி பகுதி முழுவதையும் சிஎம்டிஏ விரிவாக்கத்தின் எல்லைக்குள் கொண்டு வரும்போது, பொதுப்பணித்துறை ஏரிகள், ஊராட்சி குளங்கள் உள்ளிட்ட அனைத்து வகை நீர் பிடிப்பு பகுதிகளிலும், அதை சார்ந்து விவசாயம் செய்து வரும் விவசாய நிலங்களையும் கண்டறிந்து அவற்றை அதன் உரிய பயன்பாட்டிற்கு ஒதுக்கிவிட்டு மற்ற இடங்களை புதிய கட்டமைப்புக்கும், தொழில் சார்ந்த துறைக்கும் ஒதுக்கிட வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

சென்னை வளர்ச்சி குழுமத்தில், செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் இணைக்கப்படுவதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் பற்றி பேசும் சிலரிடம் பிபிசி தமிழ் பேசியது.

டெல்லி, மும்பை போன்ற மற்ற மாநகரங்கள் போல் சென்னை மாநகரத்திற்கும் ‘துணை நகரங்கள்’ நிச்சயம் தேவைப்படுகின்றன. அதன் அடிப்படையிலேயே தான், சிஎம்டிஏ தனது எல்லையை விரிவாக்கம் செய்கிறது என காஞ்சிபுரம் முன்னாள் எம்.பி விசுவநாதன் தெரிவித்தார். இதற்கான சில காரணங்களையும் அவர் விவரித்தார்.

அதிக மக்கள்தொகை அடர்த்தி கொண்ட ஒரு மாநகரமாக தற்போது சென்னை இருக்கிறது. இதனால் சென்னையில் இருந்து பெரும்பான்மை மக்கள் புறநகர் பகுதிகளுக்கு இடம்பெயரத் தொடங்கியிருக்கிறார்கள். மக்கள் தொகை அடர்த்தி, குடியிருப்புக்கான வசதி, குடி தண்ணீருக்கான வசதி, சுகாதாரமான காற்றோட்டம், சுகாதாரமான சுற்றுச்சூழல் இதனடிப்படையில்தான் சென்னையின் எல்லையை விரிவுபடுத்த சிஎம்டிஏ முயல்கிறது. ஏற்கெனவே சென்னை மாநகர மக்கள் கிழக்கு கடற்கரை சாலை,ஓஎம்ஆர் சாலை, ஜிஎஸ்டி சாலை வழியாக சென்னையில் இருந்து இடம்பெயர தொடங்கிவிட்டார்கள்.

செங்கல்பட்டு - சிஎம்டிஏ விரிவாக்கம்

மெட்ரோ ரயில் சேவை படகு போக்குவரத்து

முதல் கட்டமாக சோழிங்கநல்லூரில் இருந்து சிறுசேரி வரை மெட்ரோ ரயில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு சிறுசேரியில் இருந்து மகாபலிபுரம் வரை மெட்ரோ ரயில் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

பக்கிங்காம் கால்வாய் சென்னை பெருங்குடியில் இருந்து மகாபலிபுரம் வழியாக கல்பாக்கம் சென்று அங்கிருந்து மரக்காணம் வரை விரிவுபடுத்த இருக்கிறது.

அடுத்த தலைமுறையினருக்கு இட வசதி ஏற்படுத்தி மக்கள் அடர்த்தி நெருக்கடியை குறைத்து சுகாதாரமான காற்று ,குடிதண்ணீர், நகர கட்டமைப்பு, முறையாக கழிவு நீர் வெளியேற்றம், குப்பைகளை கொட்டும் தளம், படகு போக்குவரத்து, சாலைகள் அபிவிருத்தி திட்டம் போன்றவற்றைக் கொண்டு வருவதற்கு தமிழக அரசு எடுத்து இருக்கக்கூடிய மிக நீண்டகால எதிர்கால திட்டத்தின் ஒரு பகுதிதான் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் சென்னை வளர்ச்சி குழுமத்தின் எல்லைக்குள் கொண்டு வருவது என்கிறார் விஸ்வநாதன்.

ஊராட்சி பகுதிகளில் பெரிய, பெரிய கட்டடங்கள் கட்டவும் அதற்கு தேவையான கடன் உதவி பெறுவதும் எளிது என்றும் அவர் கூறுகிறார். பொதுமக்கள் வீடு கட்டுவதற்கான வீட்டு கடன்களை பெறுவது எளிதாக அமையும். அதேபோல மிகப் பெரிய வணிக வளாகங்கள் மிகப் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற கட்டிடங்கள் கட்டுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். அதற்கு கடன் வசதியும் கிடைக்கும்.

சென்னைக்கு நிகரான துணை நகரம் அமையும்

வரலாற்றுச் சுவடுகள் நிறைந்த மகாபலிபுரம், ‘சென்னையின் துணை நகரமாக’ எதிர்காலத்தில் மாறும். குறிப்பாக ‘பூஞ்சேரி’ கிராமம் வருங்காலத்தில் மிகப்பெரிய நகரமாக உருவாக்க போகிறது. டெல்லிக்கு மற்றொரு டெல்லி ஆக நொய்டா இருக்கிறதோ, அதேபோல் சென்னைக்கு மற்றொரு சென்னையாக மகாபலிபுரம் இருக்கும்! எனவே ஒரு நீண்டகால மக்கள் நலன் சார்ந்த ஒரு திட்டத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்கிறார் விஸ்வநாதன்.

செங்கல்பட்டு - சிஎம்டிஏ விரிவாக்கம்

ஏற்கெனவே சென்னை வளர்ச்சி குழுமத்தின் கீழ் இருக்கும் புனித தோமையார் ஒன்றியம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தின் சில ஊராட்சிகளில் அடிப்படை தேவைகள் அனைத்தும் பூர்த்தி அடைந்ததா என்றால் இல்லை என்கிறார் தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் சிறப்பு தலைமை பொறியாளராக பணியாற்றிய வீரப்பன்.

பல ஊராட்சிகளில் பாதாள சாக்கடை, குப்பை மேலாண்மை, சாலை வசதி உட்பட எந்த வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. ஜீவநதியான பாலாற்றில் இருந்து குடிநீர் முறையாக மேற்கண்ட ஒன்றியங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்கிறார் அவர்.

Presentational grey line
Presentational grey line

சிஎம்டிஏ குழுமத்தில் அலுவலர்கள் பற்றாக்குறை

அரசின் நடவடிக்கையால் பொதுமக்களுக்கு ஏற்படும் சில பிரச்னைகளையும் அவர் விளக்கினார்.

“சென்னை மாநகருக்குள், சிஎம்டிஏ எல்லையில் பல விதிமீறல் கட்டடங்களை கண்டறிவது, அவ்வாறு விதிமீறலில் ஈடுபட்ட கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பது, உள்ளிட்ட அடிப்படை பணிகளைத் தாண்டி கட்டடங்களுக்கு அனுமதி கொடுப்பது, பிளான் அப்ரூவல் செய்வது உள்ளிட்ட பணிகளுக்கு போதிய அலுவலர்கள் இல்லை. முறையாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இருந்தால் மெளலிவாக்கம் கட்டடம் விபத்து ஏற்பட்டு இருக்காது. அடிப்படையில் தேவையான அனைத்து அலுவலர்களையும் முறையாக நியமிக்காமல், சிஎம்டிஏ எல்லையை மட்டும் விரிவாக்கம் செய்து கொண்டே செல்வதால், மக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை. அதற்கு மாறாக மக்களுக்கு மிகுந்த சிரமம் தான் ஏற்படும். இரண்டு மாடிக்கு அனுமதி வாங்கி 4 மாடி கட்டுவது போன்ற விதிமீறல்கள் அதிகம் உள்ளன. நீர்நிலைகள் பொது இடங்கள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன,” என்கிறார் அவவர்.

கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி வாங்க கால தாமதங்கள் ஆவதோடு, பல மடங்கு பணம் செலுத்த வேண்டி வரும். சிஎம்டிஏ எல்லைக்குள் வரும் ஊராட்சி பகுதிகளில் கட்டுமானத்திற்கு வரைபட அனுமதிக்கு ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சியில் செலுத்தும் தொகையைவிட 5 மடங்கு செலுத்த வேண்டி வரும். ஒரு கட்டடம் கட்டுவதற்கு அனுமதி வாங்க ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை எடுத்துக் கொள்ளும். அந்த காலகட்டத்தில் கட்டுமானப் பொருட்களின் அடிப்படை விலை அனைத்தும் உயர்ந்து விடும். இதனால் பொதுமக்களுக்கும் துன்பம்தான்.

சிஎம்டிஏ நிர்வாகத்திற்கு பெரும் சவால்

சிஎம்டிஏ தரமற்ற நிர்வாகத்திற்கு, நேரடி சாட்சி கோயம்பேடு மார்க்கெட் தான்! அங்கு மழை காலத்தில் சென்று வர முடியுமா?, பல இடங்களில் சாலை சரி இல்லாத இடத்தில், நடைபாதையில் கிரானைட் கற்களை கொண்டு பாதை அமைத்து வருகின்றனர். இதெல்லாம் தேவைதானா? என்று வீரப்பன் கேள்வி எழுப்புகிறார்.

இப்போதும் நீர்நிலைப் பகுதிகளில் கட்டடங்கள் கட்டப்பட்டு தான் வருகின்றன. மீண்டும் மழை பெய்தால் அவை நீரில் முழுக்கவே செய்யும். ஊராட்சி பகுதிகளை சென்னை வளர்ச்சி குழுமத்தின் எல்லைக்குள் இணைத்தால் ரியல் எஸ்டேட் செய்யும் நபர்களுக்கும், இடைத்தரகர் போன்றோருக்கும்தான் லாபம்.தேவை இல்லாமல் கிராமங்களில் இதில் சேர்க்காதீர்கள், கிராமங்களில் பசுமையும், சுற்றுச்சூழலும் நிலைத்து நிற்கட்டும் என்கிறார் முன்னாள் பொறியாளர் வீரப்பன்.

ஒவ்வொரு ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் சிஎம்டிஏ ஊழியர்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், சிஎம்டிஏ விரிவாக்க எல்லைக்குள் தங்கள் ஊராட்சிகளை இணைத்துக்கொள்ள, கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்ட பிறகே ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் இதய வர்மன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், சிஎம்டிஏ நிர்வாகத்தின் சார்பாக ஒரு பணியாளர்களை நியமித்து, அங்கு நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு உரிய அனுமதி வாங்கித் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏரி, குளங்கள், விவசாய நிலங்கள் வனப்பகுதிகள் போன்ற நிலங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதவாறு சிஎம்டிஏ நிர்வாகம் வகைப்படுத்தப்படும் என்கிறார் அவர்.

அனைத்து ஊராட்சிகளிலும் கிராம மக்களின் ஒப்புதலோடு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒவ்வோர் ஊராட்சியின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஒவ்வோர் ஊராட்சிக்கும் அதற்கான வளர்ச்சி நிதி கொடுக்கப்படும். ஆகையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஊராட்சிகளிலும் கட்டமைப்பு மேம்படும் என கிராம ஊராட்சிகள் மேம்பாட்டு உதவி இயக்குநர் ஆனந்தன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மேலும் ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளுக்கான உள்கட்டமைப்பு மேம்படும் என்ற நம்பிக்கையில் தான், அனைத்து ஊராட்சிகளிலும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள் என்கிறார் இதயவர்மன்.

Presentational grey line

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: https://www.bbc.com/tamil/india-61045667