சென்னை கலங்கரை விளக்கத்தில் டிரோன் விழுந்ததால் பரபரப்பு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை கலங்கரை விளக்கத்தில் குண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டலை தொடர்ந்து டிரோன் விழுந்ததால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில், டி.ஜி.பி.அலுவலகம் எதிரே உள்ள கலங்கரை விளக்கத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக இன்ஸ்டகிராம் பக்கத்தில் தகவல் ஒன்று கடந்த மாதம் வெளியானது. அந்த தகவல் பற்றி தெரிந்தவுடன் உடனடியாக கலங்கரை விளக்கத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த தகவலை வெளியிட்ட மர்ம நபர் யார்? என்று மெரினா போலீசார் சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த மர்ம நபர் இன்னும் கைது செய்யப்பட வில்லை.

இந்த நிலையில் டிரோன் ஒன்று நேற்று கலங்கரை விளக்கத்தின் மீது விழுந்து விட்டது. இதனால் பரபரப்பான மெரினா போலீசார் டிரோனை பறக்கவிட்ட 2 பேரை பிடித்து விசாரித்தார்கள். மெரினாவை டிரோன் மூலம் படம் பிடித்ததாகவும், ரிமோட் வேலை செய்யாததால், டிரோன் கட்டுப்பாட்டை இழந்து கலங்கரை விளக்கம் மீது விழுந்து விட்டதாக பிடிபட்டவர்கள் தெரிவித்தனர்.

அதில் சதித்திட்டம் ஏதும் இல்லாததால், அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இருந்தாலும் உரிய அனுமதி இல்லாமல் மெரினாவில் டிரோனை பறக்க விட்டது தவறாகும். அதனால் டிரோனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Source: https://www.dailythanthi.com/News/State/2022/04/11214415/Excitement-over-drone-crash-at-Chennai-lighthouse.vpf