சென்னை அயோத்தியா மண்டபம் விவகாரம்; போராட்டம் நடத்திய 75க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் மீது வழக்குப்பதிவு! – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தை அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வருவதை கண்டித்து நேற்று பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தினர்.

சென்னை,

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் அயோத்தியா மண்டபம் உள்ளது.இந்த மண்டபம் தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில் தொடுக்கப்பட்ட வழக்கில், அந்த மண்டபம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது எனவும் வேறு எந்த தனிப்பட்ட அமைப்புகளும் அதில் தலையிட முடியாது எனவும் கூறி தீர்ப்பளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் மண்டபத்தில் நிர்வாக பணிகளை மேற்கொள்வதற்காக  மண்டபத்திற்கு வந்தனர்.

அப்போது பா.ஜ.கவினர் அங்கு திரண்டு வந்து அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மண்டபத்தின் கதவுகளை பூட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கரு நாகராஜன், மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன் உள்பட இந்துமுன்னணி மற்றும் பா.ஜ.கவை சேர்ந்த பலர், மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தை அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வருவதை கண்டித்து நேற்று  போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

தமிழக பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கரு நாகராஜன், மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன் உள்பட 75 பேர் மீது, தடையை மீறி செயல்படுதல் மற்றும் சட்ட விரோதமாக தடுத்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சென்னை அசோக்நகர் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Source: https://www.dailythanthi.com/News/TopNews/2022/04/12103720/Tamilnadu-BJP-party-workers-arrested-in-Chennai-over.vpf