சென்னை சென்டிரல்- மயிலாப்பூர் இடையே மினி பஸ் சேவை – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை சென்டிரல்- மயிலாப்பூர் இடையே மினி பஸ் சேவை உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து மயிலாப்பூர் வரை சிற்றுந்து (மினி பஸ்) இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, சிற்றுந்து இயக்குவதற்கு போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுத்தது. இதற்கான நிகழ்ச்சி சென்னை சிந்தாதிரிபேட்டை மேற்கு கூவம் சாலையில் நேற்று நடந்தது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை தாங்கினார்.

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் முதல் மயிலாப்பூர் வரையிலான புதிய வழித்தட சிற்றுந்து (வழித்தடம் எண். எஸ்21சி) இயக்கத்தினை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பஸ், சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து, பல்லவன் இல்லம், சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையம், சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட், மேற்கு கூவம் சாலை, டேம்ஸ் சாலை, ராயப்பேட்டை மருத்துவமனை, அஜந்தா, வள்ளூவர் சிலை மற்றும் மயிலாப்பூர் டாங்க் வழியாக மயிலாப்பூர் வரை இயக்கப்படுகிறது.

சென்னை சென்டிரலில் இருந்து தினந்தோறும் காலை 6.20, 7.55, 9.30, 11.05, 12.40, மதியம் 2.25, 4, 5.35, இரவு 7.10, 8.45 ஆகிய மணி நேரங்களிலும், மயிலாப்பூரில் இருந்து காலை 7.05, 8.40, 10.15, 11.50, மதியம் 1.25, 3.10, 4.45, மாலை 6.20, இரவு 7.55, 9.30 ஆகிய மணி நேரங்களிலும் தலா 10 முறை புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்வின்போது, தயாநிதி மாறன் எம்.பி., மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் அ.அன்பு ஆபிரகாம் மற்றும் சென்னை மாநகராட்சி 9-வது மண்டல குழு தலைவர் மதன்மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Source: https://www.dailythanthi.com/News/State/2022/04/12003139/Mini-bus-service-between-Chennai-Central-and-Mylapore.vpf