மெட்ராஸ் படம் போல் சுவற்றுக்காக சண்டை… கரூரில் திமுக – பாஜக இடையே மல்லுக்கட்டு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

கரூர்: சுவர் விளம்பரம் எழுதுவதில் திமுக மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு இருதரப்பினரும் போலீசார் முன்பே கைகலப்பில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சர்ச் கார்னர் பகுதியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலத்தின் சுற்றுச்சுவரில் திமுகவினர் விளம்பரம் எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் தாங்கள் அந்த இடத்தில் விளம்பரம் செய்ய உள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு உடன்படாத இரு கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. திடீரென கரூர் மாவட்ட பாஜகவை சேர்ந்த மாநகர மற்றும் ஒன்றிய செயலாளர்கள் சாலையில் இறங்கி திமுகவினருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, பாஜக நிர்வாகியின் செல்போனை திமுகவினர் பறித்துக் கொண்டதாக கூறி பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுவர் விளம்பரம் வரைவதில் தொடங்கிய பிரச்சனை செல்போன் பறிப்பு பிரச்சனையாக உருமாறி பாஜகவை சேர்ந்தவர்கள் ஒருபக்கம் சாலை மறியலில் ஈடுபட, மறுபக்கம் திமுகவைச் சேர்ந்த மாநகராட்சி பொறுப்பாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் சாலையில் இறங்கி பாஜகவினருக்கு எதிராக முழக்கமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் போலீசாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதன் தொடர்ச்சியாக திமுக – பாஜக ஆகிய இரு தரப்பினரையும் போலீசார் தனித்தனியாக அழைத்து சென்று 2 வது முறையாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இருதரப்பினரும் கலைந்து சென்றனர்.

English summary
The clash between the DMK and the BJP over the writing of the wall advertisement caused a stir in the area as both sides were already involved in a scuffle with the police:

Source: https://tamil.oneindia.com/news/karur/fight-for-the-wall-like-in-the-madras-movie-clash-between-dmk-and-bjp-in-karur-454963.html