Hindu Tamil Thisai | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: முறையாக சொத்துவரி செலுத்திய சென்னை மக்களுக்கு அறிவித்தபடி மாநகராட்சி சார்பில் ரூ.2.58 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாயாக சொத்துவரி உள்ளது. இதை முறையாக செலுத்துபவர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி அரையாண்டுக்கான சொத்துவரி முதல் 15 நாட்களுக்குள் செலுத்தியவர்களுக்கு அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் வரை ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 2020 – 2023 ஆம் நிதியாண்டில் முதல் அரையாண்டுக்கான சொத்துவரியை ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்துவிட்டது.

இதன்படி நேற்று வரை சொத்துவரி செலுத்திய 1.96 லட்சம் பேருக்கு ரூ.2.58 கோடி ஊக்கத் தொகையைப் பிரித்து சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது. சென்னையில் மொத்தம் 12 லட்சம் சொத்துவரிதாரர்களில் 1.96 லட்சம் பேர் தங்களுக்கான சொத்துவரியை முதல் 15 நாட்களுக்குள் செலுத்தியுள்ளனர்.

இதன் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ரூ.119 கோடி வசூல் ஆகியுள்ளது. இவ்வாறு சொத்துவரி செலுத்தியவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.2.58 கோடி ஊக்கத் தொகையை வழங்கி உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/788800-rs-119-crore-tax-paid-by-chennai-people-rs-2-50-crore-incentive-given-by-the-corporation.html