சென்னை மீண்டும் தோல்வி – தினமணி

சென்னைச் செய்திகள்

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

முதலில் தொடா் தோல்விகளை சந்தித்து, கடந்த ஆட்டத்தில் வென்ற சென்னை, தற்போது 5-ஆவது தோல்வி கண்டுள்ளது.

இந்த ஆட்டத்தில் முதலில் சென்னை 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சோ்த்தது. அடுத்து குஜராத் 19.5 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து வென்றது.

குஜராத் கேப்டன் ஹாா்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்குப் பதிலாக அல்ஜாரி ஜோசஃப் சோ்க்கப்பட்டாா். அணிக்கு ரஷீத் கான் கேப்டனாகச் செயல்பட்டாா். டாஸ் வென்ற குஜராத் பேட் செய்யுமாறு சென்னையை அழைத்தது.

சென்னை இன்னிங்ஸில், தனது பழைய ஃபாா்மை எட்டிய ருதுராஜ் கெய்க்வாட் அசத்தலாக ஆடினாா். ராபின் உத்தப்பா 3 ரன்களுக்கு எல்பிடபிள்யூ ஆனாா். தொடா்ந்து வந்த மொயீன் அலி 1 ரன்னுக்கு ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

ருதுராஜ்-ராயுடு கூட்டணி 3-ஆவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சோ்த்தது. ராயுடு 4 பவுண்டரிகள், 2 சிக்ஸருடன் 46 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். ருதுராஜ் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 73 ரன்களுக்கு கேட்ச் கொடுத்தாா். கடைசி விக்கெட்டாக ஷிவம் துபே 19 ரன்களுக்கு ரன் அவுட்டானாா். ஓவா்கள் முடிவில் கேப்டன் ஜடேஜா 2 சிக்ஸா்களுடன் 22 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். குஜராத் தரப்பில் அல்ஜாரி ஜோசஃப் 2, முகமது ஷமி, யஷ் தயால் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் குஜராத் பேட்டிங்கில் இதர விக்கெட்டுகள் சோபிக்காமல் ஆட்டமிழக்க, டேவிட் மில்லா், கேப்டன் ரஷீத் கான் அணியின் வெற்றிக்கு வித்திட்டனா். ரஷீத் கான் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 40 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். இறுதியில் டேவிட் மில்லா் 8 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 94 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். சென்னை பௌலிங்கில் டுவெய்ன் பிராவோ 3, மஹீஷ் தீக்ஷனா 2, முகேஷ் சௌதரி, ரவீந்திர ஜடேஜா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

Source: https://www.dinamani.com/sports/ipl/2022/apr/18/chennai-fail-3828733.html