சென்னை: மூக்கு கண்ணாடி கடையில் பயங்கர தீ விபத்து – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மூக்கு கண்ணாடி விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தை சுமார் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.

சென்னை:

சென்னை சிந்தாதிரிப்பேட்டை அக்ரஹாரம் தெருவில் அடுக்குமாடி கட்டிடத்தின் தரை தளத்தில் யாகத் அலி (வயது 74) என்பவர் மூக்கு கண்ணாடி விற்பனை (ஆப்டிக்கல்ஸ்) செய்யும் கடை வைத்துள்ளார். இந்த கடையில் நரசத் அலி (42) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

இன்று காலை வழக்கம் போல நசரத் அலி கடையை திறந்து வியாபாரம் பார்த்து வந்துள்ளார். அப்போது கடையினுள் இருந்த மின் வயர் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பதறி அடித்து வெளியே ஓடி வந்தார். அதற்குள் தீ கடை முழுவதும் மளமளவென பரவி கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் எழும்பூர் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.  சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு கடையில் எரிந்து கொண்டிருந்த தீ முற்றிலும் அனைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் கடையின் உள்ளே இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். 

முதல்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குப்பை கொட்டகையில் தீ

இதேபோல், சென்னை ராஜா அண்ணாமலை புரம் காமராஜர் சாலையில் இயங்கி வந்த மாநகராட்சிக்கு சொந்தமான உரம் தயாரிப்பு மையம் மற்றும் குப்பை மறு சுழற்சி மையத்தில் உள்ள குப்பை சேகரிப்பு கொட்டகையில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

தகவல் அறிந்து வந்த மயிலாப்பூர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் குப்பை கொட்டகையில் கிடந்த அனைத்து குப்பைகளும் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: https://www.dailythanthi.com/News/State/2022/04/19151102/Terrible-fire-accident-at-a-nose-glass-shop-in-Chennai.vpf