சென்னையில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை மே 5 முதல் 12 ஆம் தேதி வரை இறுதித் தேர்வு நடைபெறும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
Chennai, First Published Apr 19, 2022, 8:47 PM IST
சென்னையில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை மே 5 முதல் 12 ஆம் தேதி வரை இறுதித் தேர்வு நடைபெறும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 2 ஆண்டுகளாக சில மாதங்கள் மட்டுமே நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. பெரும்பாலான நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வழி வகுப்புகள் நடந்தன. மேலும், அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி கல்வித்துறை சார்பில் இரண்டு ஆண்டுகளாக எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. மேலும் கடந்த ஜனவரி மாதம் கொரோனா 3 வது அலை காரணமாக பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டது. தற்போது வைரஸ் பரவல் குறைந்துள்ளதால் பிப் 1ல் இருந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன.
அதே நேரத்தில், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புக்கு தள்ளி வைக்கப்பட்ட திருப்புதல் தேர்வு இந்த மாதம் நடந்து முடிந்தது. இதனிடையே நடப்பு கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். அதன்படி, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இதன்படி 10ம் வகுப்புக்கான தேர்வுகள் மே.6 ஆம் தேதி தொடங்கி மே.30 ஆம் தேதி வரை நடைபெறும். 11ம் வகுப்புக்கான தேர்வுகள் மே.9 ஆம் தேதி தொடங்கி மே.31 ஆம் தேதி வரை நடைபெறும்.
12ம் வகுப்புக்கான தேர்வுகள் மே.5 ஆம் தேதி தொடங்கி மே.28 ஆம் தேதி வரை நடைபெறும். 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25ல் தொடங்குகிறது. இதையடுத்து இதர வகுப்புகளுக்கான இறுதி தேர்வு நடைபெறுமா என்பது குறித்தும் பள்ளிக்கல்வித்துறை எப்போது அறிவிப்பை வெளியிடும் என்று பல தரப்பிலிருந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 2022-23ஆம் கல்வியாண்டுக்கான 6-9 ஆம் வகுப்புகளுக்கு கட்டாயம் ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை மே 5 முதல் 12 ஆம் தேதி வரை இறுதித் தேர்வு நடைபெறும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
Last Updated Apr 19, 2022, 8:47 PM IST
Source: https://tamil.asianetnews.com/tamilnadu/annual-exam-for-classes-6-to-9-from-may-5th-says-chennai-district-primary-educational-officer-ralegn