சென்னையில் 8 இடங்களில் பாலூட்டும் அறைகள் திறப்பு – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னையில் 8 இடங்களில் பாலூட்டும் அறைகள் திறப்பு

சென்னை காவல் ஆணையரக வளாகம் உள்பட சென்னையில் 8 இடங்களில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறைகளை திறந்து வைத்தார் சென்னை காவல் ஆணையாளர்.

சென்னை வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவிடவும், காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தவும், சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை காவல் ஆணையரகம், மருத்துவமனை, கோயில் உள்ளிட்ட பல்வேறு பொது இடங்களுக்கு செல்லும் தாய்மார்கள், தங்களது குழந்தைகளுக்கு உணவு கொடுக்கவும், பாலூட்டவும் சிரமப்படுவதால், சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னையில், வேப்பேரி காவல் ஆணையரகம் உள்பட 8 இடங்களில், சென்னை பெருநகர காவல் மற்றும் சர்வதேச நீதி இயக்கம் (ஐஜேஎம் இணைந்து, தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறைகளை திறந்து வைக்க திட்டமிட்டு, இப்பணி முடிவடைந்தது.

அதன்பேரில், 
1.சென்னை பெருநகர காவல் ஆணையரகம், வேப்பேரி, 
2. எஃப்-4 ஆயிரம் விளக்கு காவல் நிலைய வளாகம், 3.வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையாளர் அலுவலக வளாகம், புது வண்ணாரப்பேட்டை, 
4.கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகம் 
5.அரசு சித்த மருத்துவமனை வளாகம், அண்ணாநகர்,
6.வடபழனி முருகன் கோயில் வளாகம், 
7.நங்கநல்லூர், ஆஞ்சநேயர் கோயில் வளாகம்,
8.பெசன்ட்நகர் மாதா கோயில் வளாகம் ஆகிய 8 இடங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறைகளை திறக்கும் நிகழ்ச்சியின் அடையாளமாக சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இன்று மாலை, சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையினை திறந்து வைத்தார். 

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/apr/23/opening-of-breastfeeding-rooms-at-8-places-in-chennai-3832250.html