பசுமைச் சென்னை: 1.68 லட்சம் மரக் கன்றுகள் நடப்பட்டன – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை மாநகரின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் பொருட்டு, 15 மண்டலங்களில் 1 லட்சத்து 68 ஆயிரம் மரக் கன்றுகள் நடப்பட்டன.

சென்னை மாநகரை பசுமையாக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை காக்கும் வகையிலும் குளங்களைச் சுற்றி மரங்கள் நடுவது, பொது இடங்களில் மரங்கள் நடுவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிங்காரச் சென்னை 2.0 திட்டம் மற்றும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஓராண்டில் 15 மண்டலங்களில் 1 லட்சத்து 68 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகரின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் பூங்காக்கள், திறந்த வெளி நிலங்கள், சாலையோர பூங்காக்கள், அரசுக்குச் சொந்தமான காலியிடங்கள் ஆகிய இடங்களில் மரக் கன்றுகளை நடும் பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடா்ச்சியாக சனிக்கிழமை வடசென்னையில் 95 மரக்கன்றுகள், மத்திய சென்னையில் 199, தென்சென்னையில் 244 என மொத்தம் 538 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த எண்ணிக்கை வரும் நாள்களில் அதிகரிக்கும் என்றனா்.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2022/apr/24/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-168-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9-3832613.html