கரோனா அபாயப் பகுதியாக மாறுகிறதா சென்னை ஐஐடி? 111 பேருக்கு பாதிப்பு – தினமணி

சென்னைச் செய்திகள்

கரோனா அபாயப் பகுதியாக மாறுகிறதா சென்னை ஐஐடி? 111 பேருக்கு பாதிப்பு

சென்னை: சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் புதிதாக 31 பேருக்கு  கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கரோனா தொற்றுக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 111-ஆக அதிகரித்தது. 

சென்னை ஐஐடியில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மருத்துவத் துறையின் முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், ஐஐடி வளாகத்தில் இன்றும் ஆய்வு மேற்கொண்டாா். அங்கு மேற்கொள்ளப்பட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அவா் பாா்வையிட்டாா்.

இதையும் படிக்க.. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? ராதாகிருஷ்ணன் விளக்கம்

ஐஐடி மாணவர்களை நேரில் சந்தித்து, நிலைமையைக் கட்டுப்படுத்தத்தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஐஐடி சென்னை நிர்வாகம் மேற்கொள்ளும் என்று உறுதியளித்ததோடு, அச்சமடையத் தேவையில்லை என்றும் கூறினார்.

சென்னை ஐஐடி விடுதியில் தங்கிப் பயிலும் தமிழகம், கேரளத்தைச் சோ்ந்த 3 மாணவிகளுக்கு கடந்த 20-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவா்களுடன் தொடா்பில் இருந்த 18 மாணவா்களுக்கு பரிசோதனை செய்ததில், 9 மாணவா்களுக்கு பாதிப்பு உறுதியானது.

இதையடுத்து, ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவா்கள், பேராசிரியா்கள், பணியாளா்கள் என 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. வெளியானதுவரையான முடிவுகளின்படி 61 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைதொடா்ந்து, திங்கள்கிழமை மேலும் 18 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், செவ்வாயன்று 31 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 111 ஆக அதிகரித்தது. இதில் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 109 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
 

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/apr/26/is-chennai-iit-becoming-a-risk-zone-for-corona-111-people-were-injured-3833878.html