பெண்களின் பாதுகாப்பு: சென்னையில் 692 இடங்களில் புதிய தெரு விளக்குகள் | The Chennai Corporation plans to install new street lights at 692 locations – hindutamil.in – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: நிர்பயா நிதியின் கீழ் சென்னை மாநகராட்சியில் 692 இடங்களில் புதிய தெரு விளக்குகள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

நிர்பயா நிதியின் கீழ் பாதுகாப்பான நகரங்கள் திட்டத்தை செயல்படுத்த டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், அகமதாபாத், லக்னோ ஆகிய நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதன்படி சென்னை பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ரூ.425.06 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 60 சதவீத நிதியான ரூ.255.03 கோடியை மத்திய அரசும், 40 சதவீத நிதியான ரூ.170.03 கோடியை மாநில அரசும் வழங்கி உள்ளது.

இதன்படி சென்னையில் உள்ள பேருந்துகளில் சிசிடிவி கேமிரா அமைப்பது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள் அமைப்பது, பெண்களுக்காக இ-கழிவறை, மொபைல் கழிவறைகள், இணையதளம் மூலம் கண்காணிக்கப்படும் தெரு விளக்குகள், அவசரகால தொலைபேசி மற்றும் மொபைல் ஆப் உள்ளிட்ட வசதிகளும் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் 692 இடங்களில் மின் விளக்குகளை அமைக்க உள்ளது. இதன்படி சென்னை மாநகராட்சி பகுதிகளில் இரவு நேரங்களில் வெளிச்சம் குறைவாக உள்ள பகுதிகள் என்று கண்டறிந்து காவல் அளித்த இடங்களில் புதிய மின்கம்பங்கள் அமைக்கப்படவுள்ளது. திருவெற்றியூர் மண்டலத்தில் 19, மணலி மண்டலத்தில் 39, தண்டையார் பேட்டையில் 109, ராயுபுரத்தில் 205, திரு.வி.நகரில் 66, அண்ணா நகரில் 129, கோடம்பாக்கத்தில் 110, அடையாறில் 7 என்று மொத்தம் 129 இடங்களில் இந்த தெரு விளக்குள் அமைக்கப்படவுள்ளன.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/792078-the-chennai-corporation-plans-to-install-new-street-lights-at-692-locations.html