சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 145 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சென்னையில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது.
சென்னை ஐஐடியில் முதலில் 3 மாணவிகளுக்கு கரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணனும் ஐஐடி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு பரிசோதனை மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
நேற்று பாதிப்பு 112 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் 33 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.
Source: https://www.dinamani.com/tamilnadu/2022/apr/27/33-more-covid-cases-confirmed-in-madras-iit-3834475.html