சென்னை அருகே வீட்டிற்குள் பாய்ந்த துப்பாக்கி தோட்டா – பயிற்சியின் போது நடந்த விபரீதம் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை, ஆவடியில் சிஆர்பிஎஃப் காவலர்களின் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது வீட்டிற்குள் குண்டு பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை அருகே ஆவடியில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கான பயிற்சி மையம் உள்ளது. நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில், பயிற்சி தளத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொண்டிருந்த போது, வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட குண்டு அருகில் உள்ள வீடு ஒன்றின் மேற்கூரையை நள்ளிரவு 1.30 மணிக்கு துளைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது அப்பகுதி மக்களிடையே  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.ஆனால்,நேற்று எந்த பயிற்சியும் மேற்கொள்ளவில்லை என சிஆர்பிஎஃப் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

இதே போன்று கடந்த ஜனவரி மாதம் பெரம்பலூரில் துப்பாக்கி பயிற்சியின்போது ஒரு வீட்டீன் மேற்கூரையில் குண்டு துளைத்தது. மேலும்,கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை கிராமத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது புகழேந்தி என்ற சிறுவன் மீது குண்டு பாய்ந்து உயிரிழந்ததையடுத்து, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்  தனது இரங்கலை தெரிவித்து ரூ. 10 இலட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://www.dailythanthi.com/News/State/2022/04/29134641/Gunshot-wound-to-the-house-near-Chennai.vpf