’தொம்’ என்று விழுந்த சென்னை விமானம்.. பதறிய பயணிகள்! இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் த்ரில் அனுபவம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: திருச்சியிலிருந்து சென்னை புறப்பட்ட தனியார் விமானம் தரையிறங்க முடியாமல் பயங்கர சத்தத்துடன் தரையில் அடித்து மீண்டும் மேலே பறந்ததால் உள்ளே இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்ததாக அதில் பயணித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முகநூலில் பதிவிட்டுள்ள அவர், “இன்று (ஏப்ரல் 28) காலை திருச்சியிலிருந்து சென்னைக்கு 11.20-க்குக் கிளம்பிய இண்டிகோ ஏர்லைன்ஸ் 12.15 போல சென்னையை வந்தடைந்திருக்க வேண்டும்.

ஆனால் 1.30-க்குதான் தரையிறங்கியது. ‘தரை இறங்கியது’ என்று சொல்வது சம்பிரதாயம். தரையில் விழுந்தது என்பது நிஜம். ஒருமுறையல்ல.. இருமுறை. குழப்பமாக இருக்கிறதா?

வைகை விரைவு ரயில் என்ஜினில் மின் பழுது.. திருச்சியிலிருந்து ஒரு மணி நேரம் தாமதம்வைகை விரைவு ரயில் என்ஜினில் மின் பழுது.. திருச்சியிலிருந்து ஒரு மணி நேரம் தாமதம்

கிடைக்காத சிக்னல்

12.05 போல வெளியே எட்டிப்பார்த்தேன். கடல் பரப்புதான் தெரிந்தது. சென்னை வந்தாகிவிட்டது, இறங்குவதற்கான சமிக்ஞ கிடைக்கவில்லை என்பதை விளங்கிக் கொண்டேன். அரைமணி நேரம் பெருங்கடல் மேலே சுற்றிக் காண்பித்தார்கள். 12.33-க்கு இறங்கப்போவதாக சொன்னார் அந்த வீடியோகேம் பிளேயர். அதாவது இந்த விமானத்தின் கேப்டன்.

ஆசைந்து ஆடிய விமானம்

கொஞ்சம் கொஞ்சமாக வேகமும் உயரமும் குறைக்கப்பட்டு விமானதளத்தை நோக்கிப் பறந்தோம். உயரம் இன்னும் குறையத் தொடங்கியது, ஆனால் அதற்கு இணையாக குறைந்திருக்க வேண்டிய வேகம் குறையவில்லை என்பது என் கணிப்பு. கொஞ்சம் வேகமாகவே சென்றுகொண்டிருந்தோம். விமானம் இப்படியும் அப்படியும் ஆடுகிறது. கொஞ்சம் அச்சத்தைக் கொடுக்கும் விதமாகவே அசைந்து அசைந்து சென்றது.

கட்டுப்பாட்டை இழந்த விமானம்

விமானத்தை செலுத்துகிற அந்த நுகம் (Yoke) கேப்டனின் கட்டுக்குள் இல்லை என்பதை உணர்ந்தேன். விமான தளத்துக்குள் நுழைந்தோம். தரையை நெருங்கினோம். திடீரென விமானம் தரையில் ‘தொம்’ மென்று விழுந்தது. எல்லாருக்கும் தூக்கிவாரிப் போட்டது. சில சன்னமான அலறல்கள், வசைகள் – பல மொழிகளில். ஓடுதளத்தில் கொஞ்சதூரம் ஓடியது. திட்டிக்கொண்டே பலரும் பெல்ட்டுகளைக் கழட்டும் சத்தம் கேட்டது.

மீண்டும் பறந்த விமானம்

மறுபடியும் ஒரு சிறு சலசலப்பு. என்னவென்று வெளியே எட்டிப்பார்த்தால் விமானம் சமமாக இல்லாமல் சற்று மேல் நோக்கிய வண்ணம் ஒரு கோணத்தில் நகர்ந்துகொண்டிருந்தது. கொஞ்சம் சுதாரித்துப் பார்த்தால் மறுபடியும் மேலெழுந்து பறக்கத் தொடங்குகிறது என்பதை உணர்ந்தோம். அச்சத்துடன் பலவிதக் குரல்கள். சாதாரண இறைநம்பிக்கைகள் எல்லாம் தீவிர பக்திக்குள்ளானதை பலர் உதட்டசைவில் பார்க்கமுடிந்தது.

பதறிய பயணிகள்

ஒரு வயதான தாயின் சத்தமான கூக்குரலும், 13-வயது பேத்தி அவரை சாந்தப்படுத்த முயல்வதும் துணிவாக இருப்பதாகக் காட்டிக்கொண்ட சில ஆண்களையே அசைத்ததையும் பார்த்தேன். அந்த அம்மாவுக்கு அழுகை அதிகமாகி மூச்சுத்திணறல் ஏற்பட்டது, பலருக்கும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மறுபடியும் வங்காள விரிகுடா சுற்றுலா – கூடுதல் கட்டணமின்றி. இந்த முறை 25 நிமிடங்கள். 1.35-க்கு இரண்டாவது தரையிறங்கல். இந்த முறை அந்த வீடியோ கேம் பிளேயர் கொஞ்சம் கற்றுக்கொண்டார் போல.

ஒரு வழியாக…

வேகம் கொஞ்சம் குறைக்கப்பட்டது. ‘தொம்’மென்று விழாமல் ‘டம்’மென்று விழுந்தது. என் வரிசையில் அந்த ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து எல்லாவற்றையும் வேடிக்கப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு 5 -வயது பையனுக்கு (அந்தப் பாட்டியின் பேரன்) பயங்கர த்ரில். வீடியோ கேம் பருவம்தானே! அந்த கேப்டனுக்கும் இதே வயதுதான் இருக்கும் என நினைக்கிறேன்.

English summary
Trichy to Chennai flight travel – Music composer James Vasanthan shares thrilling experience: திருச்சியிலிருந்து சென்னை புறப்பட்ட தனியார் விமானம் தரையிறங்க முடியாமல் பயங்கர சத்தத்துடன் தரையில் அடித்து மீண்டும் மேலே பறந்ததால் உள்ளே இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்ததாக அதில் பயணித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/trichy-to-chennai-flight-travel-music-composer-james-vasanthan-shares-thrilling-experience-456444.html