மூளைசாவு அடைந்த இளைஞரின் இதயத்தை சென்னைக்கு 84 நிமிடத்தில் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் – BBC Tamil

சென்னைச் செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

(இன்றைய (மே 2) நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)

விபத்தில் மூளைசாவு அடைந்த இளைஞரின் இதயத்தை, வேலூரில் இருந்து 84 நிமிடத்தில் சென்னையில் உள்ளவருக்கு மாற்ற ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்த ஓட்டுநருக்கு பாராட்டு குவிந்து வருவதாக, ‘தினத்தந்தி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் மதனஞ்சேரி குந்தன்வட்டத்தை சேர்ந்தவர் தினகரன் (வயது 21). சில தினங்களுக்கு முன் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர் மூளைசாவு அடைந்தார்.

இதையடுத்து அவரது பெற்றோர் தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, அவரது இதயம் சென்னையில் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 41 வயது ஆண் நோயாளிக்கு தானமாக கொடுக்க தமிழ்நாடு உடல் உறுப்பு ஆணையம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டன.

இதையடுத்து நேற்று மாலை 3.10 மணிக்கு வேலூர் மருத்துவமனையில் மூளைசாவு அடைந்த தினகரனின் இதயத்தை அதற்கான பிரத்யேக பெட்டியில் வைத்துக்கொண்டு ஆம்புலன்ஸ் சென்னை நோக்கி புறப்பட்டது. இந்த ஆம்புலன்சை சென்னை அப்பல்லோ மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வேல்முருகன் என்பவர் ஓட்டினார். தொடர்ந்து இந்த இதயம் வேலூரில் இருந்து வருவது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வேலூரில் இருந்து சென்னை கிரீம்ஸ் சாலை வரை தேவையான போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சென்னை போக்குவரத்து போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதையடுத்து வேலூரில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் 84 நிமிடத்தில் அதாவது மாலை 4.34 மணிக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையை வந்தடைந்தது.

இதையடுத்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வேல்முருகனை பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

சிஎஸ்கே அதிரடி வெற்றி – தோனி தலைமை, கெய்க்வாட் ஆட்டத்துக்கு குவியும் பாராட்டு

தோனி

பட மூலாதாரம், BCCI/IPL

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி 99 ரன்கள் குவித்தார் என ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை, ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியின் 46-வது லீக் ஆட்டம் புனேவிலுள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று இரவு 7:30 மணிக்கு நடைபெற்றது.

டாஸை வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். முதல் 8 போட்டிகள் வரை ரவீந்திர ஜடேஜா தலைமையில் களமிறங்கிய சென்னை அணி, நேற்றைய போட்டியில் எம்.எஸ். தோனி தலைமையில் விளையாடியது.

சென்னை அணி நிர்ணயித்த 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.

சென்னை அணியின் பேட்டிங்கின்போது தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ், டெவான் கான்வே ஆகியோர் களமிறங்கினர். முதல் 6 ஓவர்கள் வரை நிதானமாக விளையாடிய ருதுராஜ் அதன் பின்னர் வேகம் எடுத்தார். பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிகளுக்கும் பறக்கவிட்டார்.

சிறப்பாக ஆடி சதத்தை நெருங்கும்வேளையில் ருதுராஜ் ஆட்டமிழந்தார். அவர் 57 பந்துகளில் 99 ரன்கள் குவித்து வீழ்ந்தார். இதில் தலா 6 பவுண்டரிகள், சிக்ஸர்கள் அடங்கும்.

முதல் விக்கெட்டுக்கு ருதுராஜ்-கான்வே ஜோடி 182 ரன்கள் குவித்தது. இது ஐபிஎல் போட்டிகளில் எந்தவொரு விக்கெட்டுக்கும் சென்னை அணி சார்பில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும். இதற்கு முன் 2020-ஆம் ஆண்டு சென்னை வீரர்கள் ஷேன் வாட்சன் – ஃபா டூ பிளெசிஸ் ஜோடி 181 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது.

மறுமுனையில் விளையாடிய கான்வே 55 பந்துகளில் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் தோனி 7 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஹைதராபாத் அணிசார்பில் அபிஷேக் சர்மா 39, எய்டன் மார்கிரம் 17,கேப்டன் கேன் வில்லியம்சன் 47, சஷாங்க் 15, வாஷிங்டன் சுந்தர் 2 ரன்கள் எடுத்தனர். நிக்கோலஸ் பூரன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணி தரப்பில் முகேஷ் சவுத்ரி 4, பிரட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர் என, ‘இந்து தமிழ் திசை’ செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, கெய்க்வாட்டின் அதிரடி ஆட்டம், தோனியின் தலைமைக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்துவருகிறது.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குஜராத் முன்னேறாது – அரவிந்த் கேஜ்ரிவால்

அரவிந்த் கேஜ்ரிவால்

பட மூலாதாரம், PTI

குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் மாநிலம் முன்னேறாது என ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளதாக ‘தினமணி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாரூச் மாவட்டம், சண்டேரியா பகுதியில் பாரதிய பழங்குடியினர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் பங்கேற்று பேசுகையில், “குஜராத்தில் அரசு பள்ளிகளின் நிலை பரிதாபகரமாக உள்ளது. இங்கு 27 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருந்தும், அரசு பள்ளிகளை மேம்படுத்துவதில் அக்கட்சி தோல்வியடைந்துவிட்டது. இதுவரை 6,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகளின் தரத்தை, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் நேரில் பார்த்து அறிந்துகொள்ள வேண்டும். பாஜகவுக்கு மீண்டும் வாய்ப்பளித்தால், குஜராத் முன்னேறாது.

குஜராத்தில் முன்கூட்டியே தேர்தலை நடத்த பாஜக விரும்புவதாக நான் கேள்விப்பட்டேன். டிசம்பர் வரை பிரசாரத்துக்கு கால அவகாசம் இருந்தால், ஆம் ஆத்மி வெற்றி பெற்றுவிடும் என்று பாஜக அஞ்சுகிறது. ஆம் ஆத்மி மீதான அச்சம் காரணமாகவே தேர்தலை விரைந்து நடத்த பாஜக விரும்புகிறது” என்றார்.

இடைக்கால அரசாங்கம் வெறும் ஊழல் ஏற்பாடு – சஜித்

சஜித் பிரேமதாச

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் இடைக்கால அரசாங்கத்துக்கான பிரேரணையானது திருட்டு, ஊழலில் இருந்து விடுபடுவதற்கான வெறும் ஊழல் ஏற்பாடு என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இவ்வாறான மோசடி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதை விட விருப்பத்துடன் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து தனது கொள்கைகளை நிலைநாட்டுவேன் என தெரிவித்துள்ளதாக, ‘தமிழ் மிரர்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக மக்கள் போராட்டத்தை காட்டிக் கொடுக்கப் போவதில்லை. அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் பொதுமக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் சலுகைகளை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலகுவதற்கு விருப்பமில்லாமல் தொடர்ந்தும் ஆட்சியைப் பிடித்துக்கொண்டிருப்பதாகவும் இடைக்கால அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கத் தவறினால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்க நேரிடும் என அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகொடுக்கப் போவதில்லை. என் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விருப்பத்துடன் வழங்குகிறேன்.

மக்களின் ஆசீர்வாதத்துடன் ஆட்சியில் ஈடுபடுவோம். பொதுமக்களின் தீர்மானத்துக்கு மதிப்பளிப்போம்” என்றார்.

பிரச்னைக்கு எம்மால் தீர்வு காண முடியும் – ரணில்

ரணில் விக்கிரமசிங்க

பட மூலாதாரம், Getty Images

கட்சிகள் கொளைகளைக் களைந்து அனைவரும் ஒன்றிணைந்து புதிய திட்டங்களுடன் செயல்பட முன்வர வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் இலங்கை முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக ‘வீரகேசரி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “புதிய அரசியல் திருத்தங்கள் ஊடாக நாட்டின் இன்றைய நெருக்கடி நிலைமைகளை வென்றுவிட முடியாது. கட்சிகள் கொள்கைகளைக் களைந்து அனைவரும் ஒன்றிணைந்து புதிய திட்டங்களுடன் செயல்பட முன் வர வேண்டும்.

அதன் ஊடாகவே நெருக்கடி நிலையை வெற்றிக்கொள்ள முடியும். நெருக்கடிக்கு தீர்வு காண முடியாத அரசாங்கத்தினால் பயன் இல்லை; அனைவரினதும் பங்களிப்பும் அவசியமானது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு எம்மால் முடியும், அதற்கு புதிய திட்டங்கள், கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: https://www.bbc.com/tamil/india-61295079