சென்னை மக்களே ஹேப்பியா.. பஸ் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது.. இனிமேல் செல்போனில் பார்க்கலாம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் நகரப்பேருந்துகள் எந்த இடத்தில் வந்துகொண்டிருக்கிறது எத்தனை மணிக்கு நீங்கள் நிற்கும் பஸ் ஸ்டாப்புக்கு அந்த பேருந்து வந்து சேரும் என்ற விவரத்தை இனி சுலபமாக உங்கள் ஸ்மார்ட் போன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

போக்குவரத்துத் துறை சார்பில் வடிவமைக்கப்பட்ட சென்னை பஸ் என்ற புதிய செயலியை இன்று அறிமுகம் செய்து வைத்து அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிட்டுள்ளார் அமைச்சர் சிவசங்கர்.

இந்த செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்வதன் மூலம் இனி பேருந்துக்காக கால் கடுக்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உங்களுக்கு ஏற்படாது.

கடவுளே.. ஸ்கூல் மாணவிகளா இப்படி.. அதுவும் பஸ் ஸ்டான்டில் போய்.. மதுரையில் நடந்த பரபரப்பு சம்பவம்!கடவுளே.. ஸ்கூல் மாணவிகளா இப்படி.. அதுவும் பஸ் ஸ்டான்டில் போய்.. மதுரையில் நடந்த பரபரப்பு சம்பவம்!

போக்குவரத்துத் துறை

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராக சிவசங்கர் பொறுப்பேற்றது முதல் துறை ரீதியிலான பணிகளில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகளுடன் தினமும் ஆலோசனை நடத்தி போக்குவரத்துக் கழகங்களை எந்த வகையில் மேம்படுத்தலாம் என கருத்து பரிமாறி வருகிறார். இந்நிலையில் சென்னை பஸ் என்ற பெயரில் புதிய செயலி ஒன்றை இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வெளியிட்டுள்ளார்.

சென்னை பஸ்

பேருந்துகளில் பயணிப்போர் நலன் கருதி இந்த சென்னை பஸ் என்ற செயலியானது போக்குவரத்துத் துறை சார்பில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் நகரப் பேருந்துகளின் எண்கள் மூலம் அது எந்த இடத்தில் தற்போது வந்து கொண்டிருக்கிறது நீங்கள் நிற்கும் பேருந்து நிலையத்திற்கு வந்து சேர இன்னும் எத்தனை நிமிடங்கள் ஆகும் என்பதை துல்லியமாக அறிந்துகொள்ளலாம்.

விரிவுபடுத்தப்படும்

முதற்கட்டமாக சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவையானது விரைவில் திருச்சி, சேலம், மதுரை, கோவை, என விரிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் புறநகர்ப் பேருந்துகள் தொடர்பான விவரங்களை மக்கள் எளிதில் அறிந்துக்கொள்ளும் வகையில் அதற்கும் பிரத்யேக செயலி வடிவமைப்பது குறித்த திட்டமும் போக்குவரத்துத் துறையிடம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊருக்கு புதியவர்கள்

இதனிடையே சென்னை பஸ் போன்ற புதுமையான செயலிகள் மூலம் சென்னை போன்ற பெரு மாநகரங்களுக்கு பணி நிமித்தமாக புதிதாக வருபவர்கள் யாரிடமும் பஸ் வருகை குறித்து விசாரிக்காமல் தங்கள் ஸ்மார்ட் போன் மூலம் நேரடியாக விவரம் அறிந்துகொள்ளலாம். இதன் மூலம் தாங்கள் ஊருக்கு புதியவர்கள் இல்லை என்பதை போல் காட்டிக்கொள்ள முடியும் என்பதோடு தேவையற்ற நிகழ்வுகளையும் தவிர்க்க முடியும்.

English summary
Transport Dept introduced a Chennai Bus app: போக்குவரத்துத் துறை சார்பில் வடிவமைக்கப்பட்ட சென்னை பஸ் என்ற புதிய செயலியை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/minister-sivasankar-introduced-a-new-app-called-chennai-bus-457085.html