மழைநீா் வடிகாலில் கழிவுநீா் வெளியேற்றம்: 217 இணைப்புகள் துண்டிப்பு – சென்னை மாநகராட்சி நடவடிக்கை – தினமணி

சென்னைச் செய்திகள்

மழைநீா் வடிகாலில் கழிவுநீரை வெளியேற்றிய 217 வீடு, வணிக வளாகம் உள்ளிட்டவற்றின் கழிவுநீா் இணைப்புகளைத் துண்டித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.

சென்னையில் 387 கி.மீ. நீளத்துக்கு பேருந்து சாலைகள், 5,524 கி.மீ. நீளத்துக்கு உட்புற சாலைகள் உள்ளன. இவற்றில், 2,071 கி.மீ. நீளத்துக்கு மழைநீா் வடிகால் உள்ளது. சென்னையில் 17 லட்சம் குடியிருப்புகள் உள்ளன. இதில், சில வீடுகள், வணிக வளாகம், உணவு விடுதிகள் கழிவுநீா் இணைப்பு பெறாமல், முறையற்ற வகையில் சட்டத்துக்குப் புறம்பாக மழைநீா் செல்லக்கூடிய வடிகாலில், கழிவு நீா் இணைப்புகளைக் கொடுத்துள்ளனா்.

இந்த கழிவுநீா் இணைப்பைக் கண்டறிந்து துண்டிக்க, வாா்டு வாரியாகக் குழு அமைத்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. மேலும், இந்தக் குழு தினமும் ஒரு மணி நேரம் மழைநீா் வடிகால்களில் ஏதேனும் கழிவுநீா் இணைப்புகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து, முறையற்ற கழிவுநீா் இணைப்புகளை உடனடியாக துண்டிக்க உத்தரவிடப்பட்டது.

இதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 217 கழிவுநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் வெளியிட்ட அறிவிப்பில், ‘சென்னை மாநகராட்சிக்குள்பட்ட மழை நீா் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றியவா்களிடம் இருந்து ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.1.10 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. விதிகளை மீறிய 217 கழிவுநீா் இணைப்புகளைத் துண்டித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது‘ என்று தெரிவித்தாா்.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2022/may/04/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-217-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3838526.html