ஐஐடி-மெட்ராஸ்: ஆன்லைனில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகள்… இனி பொதுமக்களும் படிக்கலாம்! – Vikatan

சென்னைச் செய்திகள்

அனைவருக்கும் உயர் தரத்துடன் கூடிய கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகள் கிடைக்கச் செய்யும் விதமாக பிரத்யேகமான முன்முயற்சியை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) மேற்கொண்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஆர்வமுடைய எவரும் அணுகும் வகையில் முக்கிய படிப்புகளைக் கொண்ட வலைவாசல் (Portal) ஒன்றை கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை ஆசிரியர்கள் உருவாக்கியுள்ளனர்.

‘இந்தியாவின் கிராமப் பகுதிகளுக்கும் உயர்தரமான கல்வியை கிடைக்கச் செய்ய வேண்டும்’ என்ற சென்னை ஐஐடி-யின் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் இந்த முன்முயற்சி ஒரு முக்கிய படியாகும்.

காமகோடி வீழிநாதன்

புரோகிராமிங் (Programming), டேட்டா ஸ்ட்ரக்சர்ஸ் (Data Structures), கம்ப்யூட்டர் ஆர்கனைசேஷன் (Computer Organisation), அல்காரிதம் (Algorithms) ஆகிய முக்கிய கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகள் http://nsm.iitm.ac.in/cse/ என்ற வலைவாசலில் (portal) காணமுடியும். தொற்றுநோய் காலத்தில் சென்னை ஐஐடி மாணவர்களுக்காக ஒவ்வொரு பாடத் திட்டத்திற்கும் நடத்தப்பட்ட நேரடி விரிவுரைகளை யூடியூப்-பில் காண முடியும்.

இந்த முன்முயற்சி குறித்து சென்னை ஐஐடியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை (CSE) தலைவர் பேராசிரியர் சி.சந்திரசேகர் பேசும்போது, “இளங்கலை மற்றும் பட்டதாரி நிலைகளில் உள்ள மாணவர்களுக்காக இத்துறையின் ஆசிரியர்கள் நடத்திய சிஎஸ்இ முக்கிய பாடப்பிரிவுகளின் நேரடி விரிவுரைகளின் பதிவுகள், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த பாடத் திட்டங்களைப் பற்றிய அடிப்படைக் கருத்துகள் மற்றும் கொள்கைகளை சரியான முறையில் கற்றுணர முடியும். கணினி அறிவியல், பொறியியல் ஆகிய துறைகளில் முக்கியமாகவும், அடிப்படையாகவும் விளங்கும் பாடங்களை எவ்வாறு திறம்பட கற்பிப்பது, சிக்கலுக்குத் தீர்வு காணும் திறன்களை மாணவர்களிடையே எவ்வாறு மேம்படுத்துவது போன்றவை பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் CSE முக்கிய பாடங்களைக் கற்பித்தல் மற்றும் கற்றல் தரத்தை மேம்படுத்த இந்த போர்ட்டல் பயன்படும் என நம்புகிறோம்,” என்றார்.

Source: https://www.vikatan.com/news/education/itt-madras-makes-courses-on-computer-science-portal-for-everyone