பேருந்து எங்கு வருகிறது என எளிதில் அறிந்துகொள்ள `சென்னை பஸ்’ ஆப்; எவ்வாறு செயல்படும்? – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னையில் தினமும் பயணிக்கும் பயணிகளுக்கும், பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருகை தரும் பயணிகளுக்கும் உதவும் வகையில், இனிமேல் பேருந்துகள் வரும் நேரம், எங்கே வந்துகொண்டிருக்கிறது எனத் தெரிந்துகொள்ள `சென்னை பஸ்’ என்ற ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆப்பை நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பானது மேம்படுத்தப்பட்ட நவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளது. தலைமைச் செயலக அலுவலகத்தில், இந்த சென்னை பஸ் ஆப்பை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

இந்த சென்னை பஸ் செயலி சீரிய முறையில் இயங்க, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் உள்ள சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் கருவிகள் பேருந்துகளில் பொறுத்தப்பட்டுள்ளதால் பேருந்து எங்கு நிற்கிறது, எங்கு வருகிறது என்பதைப் பயணிகள் முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் பயணிகள் இருக்கும் இடம் மற்றும் அவர்களைச் சுற்றி ஒரு கிலோ மீட்டருக்குள் இருக்கும் பேருந்து நிறுத்தங்களின் வரைபடம் காண்பிக்கப்படும். அதில் போக வேண்டிய பேருந்து நிறுத்தத்தை க்ளிக் செய்தால் போதும், அந்த பேருந்து நிறுத்தத்துக்கு அடுத்தடுத்து வரக்கூடிய பேருந்துகளின் தட எண், விவரங்கள் மற்றும் நேரம் கைபேசியில் தெரியும்.

Source: https://www.vikatan.com/news/tamilnadu/mtc-introduces-chennai-bus-app-to-hep-commuters-reach-destination-easily