சென்னை மயிலாப்பூரில் பயங்கரம்: தொழில் அதிபர், மனைவியுடன் படுகொலை – உடல்கள் மூட்டையாக கட்டி புதைப்பு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

அமெரிக்காவில் இருந்து மயிலாப்பூரில் திரும்பிய தொழில் அதிபர், மனைவியும் படுகொலை செய்யப்பட்டு உடல் மூட்டையில் கட்டி புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, 

சென்னை மயிலாப்பூரில் நகை-பணத்துக்காக தொழில் அதிபர் மனைவியுடன் கொலை செய்யப்பட்டார். கொலை செய்த டிரைவர் 5 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார்.

தொழில் அதிபர்

சென்னை மயிலாப்பூர் துவாகர நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 58). தொழில் அதிபரான இவர் குஜராத்தில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அனுராதா (53). இவர்களுடைய மகள் சுனந்தா திருமணமாகி அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஸ்ரீகாந்துக்கு மாமல்லபுரத்தில் பண்ணை வீடு ஒன்று உள்ளது.

ஸ்ரீகாந்திடம் கார் டிரைவராக நேபாளத்தை சேர்ந்த கிருஷ்ணன் (30) வேலை செய்து வருகிறார். மேலும் வீட்டின் அனைத்து பராமரிப்பு பணிகளையும் அவரே செய்து வந்தார். எனவே அவருடைய கண்காணிப்பில் வீட்டை விட்டுவிட்டு 2 மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் வசிக்கும் ஸ்ரீகாந்தின் மகளை பார்க்க தம்பதியினர் அமெரிக்கா சென்றிருந்தனர்.

நேற்று அவர்கள் அமெரிக்காவில் இருந்து திரும்பினர். விமான நிலையத்தில் இருந்து டிரைவர் கிருஷ்ணன் அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்தார். இந்தநிலையில் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார்களா? என்பதை அறிய அமெரிக்காவில் இருந்து அவர்களது மகள் செல்போனில் தொடர்பு கொண்டார்.

வீடு முழுவதும் ரத்தக்கறை

ஆனால் நீண்டநேரமாகியும் அவர்கள் செல்போனை எடுக்கவில்லை. இதனால் பதறிப்போன சுனந்தா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மயிலாப்பூர் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீடு முழுவதும் ரத்தக்கறையாக இருந்தது. உடனே ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளது என்பதை உணர்ந்த போலீசார் கமிஷனருக்கு தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து கமிஷனர் சங்கர் ஜிவால் அமெரிக்காவில் உள்ள சுனந்தாவிடம் தொலைபேசியில் பேசினார். அதற்கு அவர் தனது பெற்றோரை டிரைவர் கிருஷ்ணன்தான் கவனித்து வருகிறார். இதனால் கிருஷ்ணனின் செல்போன் எண்ணை கமிஷனரிடம் கொடுத்தார். அந்த எண்ணுக்கு போலீசார் தொடர்புகொண்டனர். ஆனால் கிருஷ்ணன் பதில் அளிக்கவில்லை.

ஆந்திரா மாநிலம் ஓங்கோல்

இதையடுத்து சந்தேகமடைந்த போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கிருஷ்ணனின் செல்போனை கண்காணித்தனர். இதில் அவருடைய செல்போன் எண் ஆந்திரா மாநிலம் ஓங்கோல் பகுதியில் இருப்பதாக காட்டியது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன் நேரடி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் ஓங்கோல் போலீசாரின் உதவியுடன் டிரைவர் கிருஷ்ணன் சென்றுகொண்டிருந்த காரை மடக்கினர். அந்த காரில் மூட்டை, மூட்டையாக நகை-பணம் இருந்தது. அந்த பணமும், நகையும் ஸ்ரீகாந்த் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது என்பது தெரிய வந்தது. அவருடன் அரியானாவைச் சேர்ந்த கிருஷ்ணனின் நண்பர் ரவி (28) இருந்தார். 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தபோது, அதிர்ச்சி தகவல் கிடைத்தது. கொலை செய்த டிரைவர் 5 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார்.

பண்ணை வீட்டில் மூட்டையாக கட்டி…

நகை-பணத்திற்காக ஸ்ரீகாந்தையும், அவரது மனைவியையும் கொடூரமாக கொலை செய்து மாமல்லபுரத்தில் உள்ள ஸ்ரீகாந்த்துக்கு சொந்தமான பண்ணை வீட்டில் மூட்டையாக கட்டி புதைத்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியுள்ளளது.

Source: https://www.dailythanthi.com/News/State/2022/05/08064348/Brutal-Murder-Took-Place-in-Chennai-Mylapore.vpf