சென்னை நேற்று போல் இன்று இல்லை.. ஏன் தெரியுமா? – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை நேற்று போல் இன்று இல்லை.. ஏன் தெரியுமா?

சென்னை: சென்னையில் சித்திரை மாத கத்திரி வெயில் மக்களை வாட்டி, வதக்கி வந்த நிலையில், இன்று காலை முதலே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெயிலின் கடுமை குறைந்துள்ளது.

நேற்று கடும் அனல்காற்று வீசியதால், சென்னை மக்கள் கடும் துயரத்தை சந்தித்த நிலையில், அதற்கு மாறாக இன்று சென்னை மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, வங்கக் கடல் பகுதியில் நிலவும் அசானி புயல், இன்று காலை நிலவரப்படி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒடியுள்ள தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதுமேலும் வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை வட ஆந்திரா – ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மற்கு மற்கும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவக் கூடும். 

அதன்பிறகு வடக்கு – வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதியை நோக்கி நகரக் கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் படிப்படியாக புயலாக வலுவிழக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/may/09/chennai-is-not-like-yesterday–do-you-know-why-3841451.html