சென்னை: வீடுகளை இடிக்க கூடாது என தீக்குளித்தவர் மரணம் – நீடிக்கும் பதற்றம் – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை மயிலாப்பூர் ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகர்ப் பகுதியின் இளங்கோ நகரில் 259 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடுகளை இடிக்கும்படி உத்தரவிட்டது. இந்த நிலையில், கடந்த 29-ம் தேதி ஆக்கிரமிக்கப்பட்ட வீடுகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினர். இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராடி வந்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி 150 வீடுகளுக்கு மேல் தற்போது இடிக்கப்பட்டுள்ளது.

இடிக்கப்பட்ட வீடுகள்

இந்த நிலையில் அப்பகுதியில் வசித்து வந்த பழ வியாபாரி கண்ணையா (55) என்பவர் தனது வீட்டையும் இடித்து விடுவார்களோ என்ற மன உளைச்சலில் இருந்துள்ளார். இதையடுத்து அதிகாரிகள் கண்ணையா வீட்டை நெருங்கியபோது, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்து, அவசரகால ஊர்தி மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இளங்கோ நகர்

இளங்கோ நகர்

பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 92 சதவிகித தீக்காயம் அடைந்த அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. பாதுகாப்புக்காக அந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறை பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Source: https://www.vikatan.com/news/tamilnadu/protest-against-demolition-of-houses-protester-died