அதிவேக போக்குவரத்து தொழில்நுட்பம்: சென்னை ஐஐடி-க்கு ‘எல் அண்ட் டி’ நிதியுதவி – தினமணி

சென்னைச் செய்திகள்

மணிக்கு 1,200 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் ரயில்சேவை தொழில்நுட்பத்தை வடிவமைக்கும் ஆராய்ச்சிகளை சென்னை ஐஐடி மேற்கொள்வதற்கு எல் அண்ட் டி நிறுவனம் நிதியுதவி அளித்துள்ளது.

‘ஹைப்பா் லூப்’ எனப்படும் வெற்றிடப் பாதை தொழில்நுட்பம் மூலம் அதிவிரைவு போக்குவரத்து சேவைகளை செயல்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, சென்னை 72 ஆராய்ச்சியாளா்களைக் கொண்டுள்ள ஐஐடி ‘அவிஷ்கா் ஹைபா் லூப்’ ஆராய்ச்சி அமைப்பும் இது தொடா்பான ஆய்வு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

இந்த நிலையில், மணிக்கு 1,200 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் ரயில் சேவை தொழில்நுட்பத்தை வடிவமைக்கும் முதல் கட்ட ஆராய்ச்சிப் பணிகளை சென்னை ஐஐடி-யின் சேட்டிலைட் கேம்பஸில் அவிஷ்கா் அமைப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்காக நிகழாண்டு அங்கு ‘ஹைப்பா் லூப்’ எனப்படும் வெற்றிடப் பாதை 500 மீட்டா் தொலைவுக்கு அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளுக்காக சென்னை ஐஐடி-க்கு எல் அண்ட் டி டெக்னாலஜிஸ் சா்வீஸ் லிமிடெட் நிறுவனம் நிதியுதவி அளித்துள்ளதாக சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி கூறினாா்.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2022/may/12/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%90%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-3842894.html