சென்னை பள்ளிகளில் ரூ.4.59 கோடி செலவில் ‘கண்ணியம்’ திட்டம் : மாநகராட்சி விரைவில் அறிமுகம் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: மாணவ,மாணவிகளுக்கு சுகாதாரம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை பள்ளிகளில் ‘கண்ணியம்’ திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மேலும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கப்படவுள்ளது.

சென்னை மாநகரை பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமாக மாற்ற நிர்பயா திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னையில் உள்ள பள்ளிகளில் சிசிடிவி கேமிரா அமைத்தல், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான கழிவறைகளை அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் நிர்பயா திட்டத்தில் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் மற்றும் தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படும் என்று மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்தார். இதன்படி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளது.

’கண்ணியம்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டப் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின்படி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் உள்ள 159 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன்படி 25,474 மாணவிகளுக்கு நாப்கின் வழங்கப்படவுள்ளது.

முதல் திட்டத்தில் ஒரு மாணவிக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு பாக்கெட் நாப்கின் வழங்கப்படவுள்ளது. 2வது திட்டத்தின் இந்த பள்ளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு 5 பாக்கெட்டுகள் வழங்கப்படவுள்ளது. 3வது திட்டத்தில் இதை பாதுகாப்பாக அப்புறபடுத்துவதற்கான பிளாஸ்டிக் பைகள் வழங்கப்படவுள்ளது. 4வது திட்டத்தில் 159 பள்ளிகளில் உள்ள மாணவ,மாணவிகளுக்கு சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.

குறிப்பாக வளர் இளம் பருவ காலத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக வகுப்புகள், இந்த நேரங்களில் சுகாதார வசதிகளை எந்த முறையில் கடைபிடிக்க உள்ளிட்டவைகள் தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தபடவுள்ளது

மேலும் இந்த விழிப்பணர்வு நிகழ்ச்சிகளை அடிப்படையாக கொண்டு சென்னை பள்ளிகளில் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த மாஸ்டர் பிளான் ஒன்றையும் தயார் செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/799414-4-59-crore-dignity-project-in-chennai-schools-chennai-corporation-prepares-master-plan.html