‛கபே’ உடன் கழிப்பறை.. சென்னை எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் முதல் முயற்சி… என்னென்ன வசதி தெரியுமா? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை இந்திராநகர் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் தனியார் நிறுவனம் மூலம் கன்டெய்னரில் ‛கபே’ உடன் கூடிய சொகுசு பொதுக்கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் இலவச பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது.

பெரிய பெரிய நகரங்களில் கழிப்பறை வசதி இன்னும் குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றின் சார்பில் புதிய வகை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

அது என்ன கக்கூஸ் ஆப்? சென்னையில் இனி கழிப்பறை தேடி அலைய வேண்டாம்.. ஈஸியா கண்டுபிடிக்கலாம்! சூப்பர்!அது என்ன கக்கூஸ் ஆப்? சென்னையில் இனி கழிப்பறை தேடி அலைய வேண்டாம்.. ஈஸியா கண்டுபிடிக்கலாம்! சூப்பர்!

சென்னையில் சொகுசு கழிப்பறை

ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட Ixora FM என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் கன்டெய்னரில் கடைகள் இணைத்து இலவச கழிப்பறை வசதி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை இந்திரா நகர் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தின் அருகே ‛லூகபே தூயா’ என்ற பெயரில் கன்டெய்னரில் சொகுசு இலவச பொதுக்கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிப்பறை நவீன முறையில் செயல்பட உள்ளது. துர்நாற்றத்தை கணக்கீடும் வகையில் மீட்டர் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. துர்நாற்றம் அதிகரித்தால் அந்த மீட்டர் எச்சரிக்கை செய்யும். இதன்மூலம் அதனை சரிசெய்யலாம்.

காபி ஹவுஸ்

மேலும் சக்கர நாற்காலியில் சென்று பயன்படுத்தும் வகையிலும் சரிவுத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வயதினருக்கும் இது பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த வகையில் சென்னையில் இதுதான் முதல் வகையாகும். இந்திரா நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த கழிப்பறை கன்டெய்னருடன் லூகேப் மெட்ராஸ் காபி ஹவுஸ் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும்

இதுபற்றி lxora FM நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அபிஷேக் நாத் கூறுகையில், ‛‛இந்த புது கழிப்பறை வசதியை தமிழகம் முழுவதுமாக கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் மதுரையை தலைமையிடமாக கொண்ட ஸ்டார்ட்அப் தூயா இன்னோவேஷன்ஸுடன் Loocafe இணைந்து செயல்படும். எங்களிடம் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி உள்ளது. சக்கர நாற்காலி செல்வதற்கான சரிவுத்தளத்துடன் கழிப்பறை வசதிகள் உள்ளன. அரசு நிலம் வழங்கும் நிலையில் இந்த நிறுவனத்தின் செலவில் கழிப்பறைகள் பல்வேறு இடங்களில் அமைக்க திட்டமிட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பம்

மாற்றுத்திறனாளிகள் பிடித்து கொள்வதற்காக கம்பி வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. பிரெய்லிக்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது. இதன்மூலம் பார்வையற்றவர்களும் பயன்படுத்த முடியும். சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. இதனால் ஈரப்பதத்தை தண்ணீராக மாற்றுவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் கழிவறைகளுக்கு தண்ணீர் வழங்கப்படும். இதற்கான தொழில்நுட்பம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்”என்றார்.

100 கழிப்பறைகள் அமைக்க…

இதுபற்றி நிர்வாக இயக்குனர் சிஆர் வெங்கடே கூறுகையில், ‛‛ இன்னும் ஒரு ஆண்டுக்குள் சென்னையில் 50 லூகேப்கள் இருக்கும். 2024 ஆண்டுக்குள் தமிழகம் முழுவதும் 100 கழிப்பறைகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். சென்னையில் 50 இடங்களிலும் அமைப்பதற்கான பணிகள் துவங்கி உள்ளது. விரைவில் வேளச்சேரி, பெசன்ட் நகர், தி.நகரில் இந்த வகை கழிப்பறைகள் இருக்கும். இந்த கழிப்பறைகளை கோவை, திருச்சி, மதுரை, கொடைக்கானல் ஆகிய நகரங்களில் அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

வாடகை வருமானம்

இந்த கழிவறையை இலவசமாக நடத்துவதால் பிரச்சனை ஒன்றும் இல்லை. இதற்கான வருமானம் அருகே இணைக்கப்பட்டுள்ள கடைகளின் வாடகை பணம் மூலம் வசூலிக்கப்படும். இந்த கழிப்பறைகளுக்கு பக்கத்தில் பிரபல உணவு, காபி ஷாப் நிறுவனங்கள் சார்பில் கடைகள் அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பல நிறுவனங்கள் இதில் ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளன. விரைவில் அவர்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும்” என்றார்.

English summary
Chennai has got its first luxury public toilet at the Indira Nagar MRTS station. The toilet is a par with the restrooms of high-end apartments. A cafe is also located near it.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-free-luxury-toilet-with-cafe-in-indira-nagar-458271.html