மேம்படுத்தப்பட்ட சென்னை சிறப்புப் பள்ளியை தொடக்கி வைத்தார் முதல்வர் – தினமணி

சென்னைச் செய்திகள்

தசைத்திறன் குறைபாடுள்ளோருக்கான சென்னை சிறப்பு பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (14.5.2022) சென்னை, ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாடல் பள்ளி சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி தசைத்திறன் குறைபாடுள்ளோருக்கான சென்னை சிறப்பு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுப்பிக்கப்பட்ட பள்ளிக் கட்டடம் மற்றும் கூடைப்பந்தாட்ட அரங்கம், பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கிய வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் நினைவாக கல்வெட்டு ஆகியவற்றை திறந்து வைத்து, அக்குழந்தைகளுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி, மின்தூக்கி வசதியுடன் கூடிய சிறப்பு பேருந்தின் சேவையினை தொடங்கி வைத்தார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளின் கற்றல் வாய்ப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அக்குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகளுடன் கூடிய சென்னை மாநகராட்சியின் சிறப்பு பள்ளியை ஆயிரம் விளக்கு பகுதியில் 2009-ஆம் ஆண்டு துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அச்சிறப்பு பள்ளியில் இன்று, 50 இலட்சம் ரூபாய் செலவில் தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான புதுப்பிக்கப்பட்ட சிறப்புப் பள்ளிக் கட்டடம், மாற்றுத்திறனாளி குழந்தைகள் விளையாட ஏதுவாக புதுப்பிக்கப்பட்ட கூடைப்பந்தாட்ட அரங்கம், 1920-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் தலைவர் வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி.தியாகராயர் அவர்களால் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டதன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்து, தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 6 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மருத்துவ உபகரணங்களை வழங்கி, அக்குழந்தைகளின் பயன்பாட்டிற்காக பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியிலிருந்து 25 இலட்சம் ரூபாய் மதிப்பிலான மின்தூக்கி வசதியுடன் கூடிய சிறப்பு பேருந்து சேவையினையும் தொடங்கி வைத்தார்.

மேலும், தசைத்திறன் குறைபாடுள்ளோருக்கான சென்னை சிறப்புப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள இயன்முறை மருத்துவ ஆலோசனை அறை, வகுப்பறை, பெற்றோர் அறை, உளவியல் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை அறை, மருத்துவ ஆய்வகம், தொழிற் பயிற்சி அறை ஆகியவற்றை  பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் நா.எழிலன், ஏ.ஜி.வெங்கடாசலம், துணை மேயர் மு.மகேஷ்குமார்,  சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி  உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/may/14/the-chief-minister-inaugurated-the-improved-chennai-special-school-3844369.html