கட்டாய ஹெல்மெட்: பின்னால் அமர்பவருக்கும் இனி அவசியம் – சென்னை போலீஸ் – BBC Tamil

சென்னைச் செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

சென்னை நகரில் சாலை விபத்துகளில் இறப்பவர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, வரும் திங்கள் (மே23) முதல் இரு சக்கரவாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டுநர் மற்றும் பில்லியன் என இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

தலைக்கவசம் இருவருக்கும் கட்டாயம் என்ற விதி பல ஆண்டுகளாக இருந்தாலும், பின்னப்பற்றுபவர்கள் குறைவாக உள்ளனர். சமீப காலங்களில் சென்னை நகரத்தில் அதிகரித்துவரும் இருசக்கரவாகன ஓட்டிகளின் இறப்புகளை கருத்தில் கொண்டு, தலைக்கவசம் இருவருக்கும் கட்டாயம் என்பதை உறுதிப்படுத்த சாலைகளில் ஆய்வுகள் நடத்தப்படும் என்றும், விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து மாதங்களில் நடந்த சாலை விபத்துகளில், சென்னை நகரில் தலைக்கவசம் அணியாததால், 98 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் 80 பேர் ஓட்டுநர்கள் மற்றும் 18 பேர் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் என தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, தலைக்கவசத்தை வாகன ஓட்டியும் பின்னால் இருப்பவரும் அணிய வேண்டும் என்பதை தீவிரமாக செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சென்னை நகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைக்கவசம் அணிவதை பழக்கமாக கொண்டுள்ளவர் அடையாறு பகுதியைச் சேர்ந்த ராஜு. ”அலுவலகம் புறப்படும்போது, ஹெல்மெட் எடுத்துக்கொள்வது என் பழக்கம். சாவி ஸ்டாண்ட் அருகே ஹெல்மெட் வைத்திருப்பேன். நமக்கான பாதுகாப்பிற்கு நாமே முக்கியத்துவம் தரவில்லை எனில், யார் நமக்காக உதவ முடியும். என் நண்பர்கள் சிலர் ஹெல்மெட் அணிவதை சிக்கலாக நினைக்கிறார்கள். ஒருசிலர், கடைகளுக்கு செல்லும்போது தேவையில்லை, நீண்டதூர பயணத்திற்கு ஹெல்மெட் போதும் என்கிறார்கள். தூரம் எவ்வளவு என்பதைவிட நம்முடைய பாதுகாப்பு முக்கியம்,”என்கிறார் ராஜு.

பெட்ரோல் டீசல்

மோட்டார் வாகன சட்டம் 1988இன் பிரிவு 129ன் படி, இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்கிறார் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘ஆர் சேப்'(R SAFE ) என்ற தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் கிருஷ்ணகுமார்.

பெட்ரோல் டீசல்

தலைக்கவசம் அணிவது இறப்புகளை குறைக்கும் என்கிறார் இவர். ”ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சாலைகளில் நடத்திவருகிறோம். தலைக்கவசம் அணிவதால், பலரின் உயிர் பாதுகாக்கப்படுகிறது. சாலை விபத்துகளில் தலையில் அடிபட்டால் பாதிப்பு அதிகம், இறப்புக்கான வாய்ப்புகள் அதிகம். அதிலும் குறிப்பாக, பில்லியனாக செல்பவர்களின் நிலைமை மோசம். இருவரும் தலைக்கவசம் அணிந்தால் ஓரளவு விபத்தின் பாதிப்பு குறையும்,”என்கிறார் அவர்.

ஹெட்மெட் அவசியம்

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 45 நபர்கள் சாலை விபத்துகளில் இறக்கிறார்கள் என தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் புள்ளிவிவரம் கூறுவதாகத் தெரிவிக்கிறார் கிருஷ்ணகுமார்.

”தலைக்கவசம் அணிவது ஒவ்வொருவரின் கடமை என்பதை வாகன ஓட்டிகள் உணர வேண்டும். இந்தியாவில் அதிகளவில் சாலைவிபத்துகள் பதிவாகும் மாநிலங்களின் வரிசையில், தமிழகம் முதல் அல்லது இரண்டாவது இடத்தில் நீடித்து வருகிறது. தினமும் இறப்புகள் பதிவாகின்றன என்பது நமக்கு கவலைதருகிறது. தலைக்கவசம் அணிவது இறப்பில் இருந்து தப்புவதற்கு பெரிய வாய்ப்பு,”என்கிறார் கிருஷ்ணகுமார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: https://www.bbc.com/tamil/india-61534998