சென்னை: தந்தையை கொன்று டிரம்மில் போட்டு புதைத்துவிட்டு தலைமறைவான மகன் – Puthiya Thalaimurai

சென்னைச் செய்திகள்

ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரை சென்னையில் கொலை செய்து, துண்டு துண்டாக வெட்டி புதைத்திருக்கிறார் அவரது மகன். இதைத்தொடர்ந்து புதைக்கப்பட்ட உடலை வட்டாட்சியர் முன்னிலையில் இன்று அதிகாரிகள் தோண்டி எடுத்துள்ளனர். தலைமறைவாக உள்ள மகனை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையை சேர்ந்தவர் குமரேசன் (வயது 80). இவர், ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். இவரின் மனைவி இறந்து விட்டார். இவருக்கு, காஞ்சனா மாலா, யமுனா, பரிமளா ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். குணசேகரன் (வயது 47) என்ற மகனும் உள்ளார். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. வளசரவாக்கத்தில் உள்ள வீட்டின் கீழ் தளத்தில் மகன் குணசேகரன் குடும்பத்தினரும், மேல் தளத்தில் குமரேசனும் வசித்து வந்தனர். இவர்களின் மூத்த மகள் காஞ்சனாமாலா, தன் கணவர் இறந்து விட்டதால், தந்தை குமரேசனுக்கு உதவியாக அவருடன் வசித்து வந்திருக்கிறார். கடந்த 15ம் தேதி காஞ்சனா மாலா, மந்தைவெளியில் உள்ள தனது மாமியாரின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். பின்னர் கடந்த வியாழக்கிழமை மாலை தந்தை வீட்டுக்கு திரும்பி உள்ளார்.

image

Advertisement

வீடு பூட்டியிருந்ததால் வெளியிலேயே காத்திருந்த காஞ்சனா மாலா, பல மணி நேரம் ஆகியும் அண்ணனும் தந்தையும் வீட்டிற்கு திரும்பாததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அப்போது வீடு முழுவதும் ரத்தக்கறை இருந்திருக்கிறது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காஞ்சனா மாலா, உடனடியாக வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார், சம்பவம் இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.

இதையும் படிங்க… எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு

அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், மேல்தளத்திலிருந்து ஒரு ‘டிரம்’மை குணசேகரன் கீழே தூக்கிக் கொண்டு சென்றதும், அதை ஒரு ஆட்டோவில் ஏற்றிச் சென்றதும் தெரியவந்திருக்கிறது. இந்த ஆதாரத்தை கொண்டு தொடர்ந்து இவ்வழக்கை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசாரின் விசாரணையில் குமரேசனை, அவரின் மகன் குணசேகரன் வெட்டிக் கொன்றது தெரியவந்தது. தந்தையை கொலை செய்த பின்னர், உடலை துண்டு துண்டாக வெட்டி, டிரம்மில் போட்டு வைத்து உள்ளார். சடலத்திலிருந்து துர்நாற்றம் வரக்கூடாது என, உப்புக்கற்களை அதில் கொட்டியுள்ளார். பின்னர் டிரம்முடன், ராணிப்பேட்டை அடுத்த காவேரிப்பாக்கம் சென்றுள்ளார். இதுகுறித்து குணசேகரன் மனைவி வசந்தியிடம் நடத்திய விசாரணையில், கடந்த 18ம் தேதி தன் கணவர் காவேரிப்பாக்கத்தில் வெங்கடேசன் என்பவரை பார்க்க சென்றதாக கூறியுள்ளார்.

image

இதை தொடர்ந்து தனிப்படை போலீசார், காவேரிப்பாக்கம் விரைந்தனர். வெங்கடேசனிடம் நடத்திய விசாரணையில், குமரேசனின் உடலை டிரம்முடன் விவசாய நிலத்தில் புதைத்தது தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து வெங்கடேசனிடம் விசாரிக்கையில், குணசேகரன் தன்னிடம் தனக்கு உடனடியாக வாடகைக்கு ஒரு வீடு, விவசாயம் செய்ய நிலம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக வெங்கடேசன் தெரிவித்திருக்கிறார். குணசேகரனை நம்பி, கோட்டைச்சேரி என்ற பகுதியில் ஒரு காலி வீட்டு மனையை வெங்கடேசன் அவருக்கு காண்பித்துள்ளார். முன்பணமாக, 25 ஆயிரம் ரூபாயை குணசேகரன் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க… நாமக்கல்: விதவைப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த கொடூரம்; மூவர் கைது

அதைத்தொடர்ந்து வியாழக்கிழமை காலை 8 மணிக்கு மினி வேனில், டிரம் (தந்தையின் உடல் இருந்த டிரம்) மற்றும் மண் வெட்டிகளுடன் குணசேகரன் சென்றுள்ளார். அங்கு வெங்கடேசனை அழைத்து, தனக்கு யாரோ சூனியம் வைத்து விட்டதாகவும், ஒரு மந்திரவாதி உதவியோடு சூனியத்தை எடுத்து டிரம்மில் அடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். புதிதாக வாங்கும் இடத்தில் அதை புதைக்கும்படி மந்திரவாதி கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதை நம்பிய வெங்கடேசன், ஆடு மேய்க்கும் நபரான பெருமாள் என்ற நபரையும் துணைக்கு அழைத்து, பள்ளம் தோண்ட உதவியுள்ளார். பள்ளத்தில் டிரம்மை போட்டு மூடிய பின், குணசேகரன் அங்கிருந்து சென்றிருக்கிறார். டிரம்மில் இருந்து துர்நாற்றம் வீசியதாக, விசாரணையின் போது வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

image

இதையடுத்து இன்று காலை நெமிலி வட்டாட்சியர் ரவி மற்றும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவர்கள் 7 பேர் முன்னிலையில் உடல் இருந்த டிரம் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டும் பணிகள் துவங்கியது. வெங்கடேசன் காண்பித்த இடத்தில் புதைக்கப்பட்ட டிரம் கண்டெடுக்கப்பட்டது. பெரும் பரபரப்புக்கு இடையே கண்டெடுக்கப்பட்ட அந்த டிரம் வெளியே எடுக்கப்பட்டு பிரேதத்தை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தலைமறைவான குணசேகரனை தேடி வருகிறோம் என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட குமரேசனுக்கு சொந்த வீடுகள், சொத்துக்கள் நிறைய உள்ளன. வளசரவாக்கத்தில் குமரேசனுக்கு சொந்தமான வீடுகளில் இருந்து, மாதந்தோறும் வாடகையாக மட்டும் இரண்டரை லட்சம் ரூபாய் வந்துள்ளது. இந்த வாடகை பணத்தையும், தன் ஓய்வூதிய பணத்தையும், தன் மூன்று மகள்களுக்கு மாதாமாதம் சரி சமமாக பிரித்து கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன், சொத்தை பிரித்து கொடுக்கும்படி தகராறு செய்துள்ளார். அதற்கு குமரேசன் சம்மதிக்கவில்லை. சம்பவத்தன்று இப்பிரச்னையால் ஏற்பட்ட தகராறில், தன் தந்தையை குணசேகரன் அடித்துக் கொன்றுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

 நவீன் குமார்

Source: https://www.puthiyathalaimurai.com/newsview/138931/Chennai-Police-investigates-on-son-killed-his-father-and-buried-him-in-a-drum