சென்னை வி ஆர் மாலில் மது விருந்து நிகழ்ச்சியில் மயங்கிய இளைஞர் மருத்துவமனையில் பலி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை கோயம்பேட்டில வி ஆர் மாலில் மது விருந்து நிகழ்ச்சியில் மயங்கிய இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருமங்கலம் – கோயம்பேடு சாலையில் வி ஆர் மால் இருக்கிறது. வணிக வளாகத்தில் தியேட்டர்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், உணவகங்கள் உள்ளன. இங்கு கேலிக்கை விடுதியான பப்பும் உள்ளது.

இந்த பப்புக்கு வார இறுதி நாட்களில் நிறைய பேர் வருவது வழக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்றைய தினம் மது விருந்துக்கு ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

சென்னை கோயம்பேடு விஆர் மாலில் அனுமதியின்றி மதுவிருந்து.. ஆட்டம், பாட்டம் என களைகட்டிய பார்ட்டிசென்னை கோயம்பேடு விஆர் மாலில் அனுமதியின்றி மதுவிருந்து.. ஆட்டம், பாட்டம் என களைகட்டிய பார்ட்டி

கோயம்பேடு

அதன்படி சென்னை கோயம்பேட்டில் உள்ள வி ஆர் மாலில் நேற்று இரவு மது விருந்து நடைபெற்றது. இந்த விருந்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். டிஜே மியூசிக்கும் இந்த விருந்தில் வைக்கப்பட்டது. மது விருந்தில் கலந்து கொள்ள ஒருவருக்கு கட்டணமாக ரூ 1500 வசூலிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மடிப்பாக்கம்

இந்த பார்ட்டியில் கலந்து கொண்ட மடிப்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் பிரவீன் (23) நேற்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று பலியாகிவிட்டார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுவிருந்து

இந்த நிலையில் இந்த மாலில் அனுமதியின்றி மது விருந்து நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து போலீஸார் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த விக்னேஷ் சின்னதுரை, மார்க் பாரத், பார் மேலாளர் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில் அனுமதியின்றி டிஜே பார்ட்டிகள் என்றால் மொட்டை மாடியில் நடத்தப்பட்டிருக்கும்.

பணம் செலுத்தி அனுமதி

டிஜேவை இயக்குவதற்கென தனியாக பணம் செலுத்தி அனுமதி பெற்று வைத்திருக்க வேண்டும். அது இல்லாமல் புத்தாண்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு டிஜே நடத்த தனியே போலீஸ் அனுமதியும் பெற்றிருக்க வேண்டும் என்றனர். இறந்த இளைஞருக்கு வேறு ஏதேனும் உடல் நல கோளாறுகள் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு வேளை மதுவிருந்துடன் போதை பார்ட்டியும் நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

English summary
Youth who participated in liquor party at Chennai V.R.Mall died. Police investigation going on.

Source: https://tamil.oneindia.com/news/chennai/youth-who-participated-in-liquor-party-at-chennai-v-r-mall-died-459254.html