நம்ம சென்னை செயலியில் புகார் கொடுத்தது தப்பா? பெண்ணின் வீடு புகுந்து மிரட்டல்.. சென்னையில் அராஜகம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: மழைநீர் வடிகாலில் கழிவு நீர் பைப்பை விடுவதாக மாநகராட்சியின் நம்ம சென்னை செயலியில் புகார் தெரிவித்த பெண்ணுக்கும் அவரது தாய்க்கும் ஊழியர்கள் மிரட்டல் விடுத்துள்ளதாக அந்த பெண் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சென்னை முகலிவாக்கம் பகுதியில் அமைந்துள்ளது ஒரு தனியார் பள்ளி. இந்த பள்ளியின் கழிவுநீரை மழைநீர் வடிகால் இணைப்பில் விடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அந்த பகுதியில் வசிக்கும் ப்ரீத்தி ராமதாஸ் என்பவர் மாநகராட்சியின் நம்ம செயலியில் புகார் தெரிவித்தார்.

ஆன்லைன் வாயிலாக புகார் தெரிவித்த நிலையில் மாநகராட்சியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர் இரு சக்கர வாகனத்தில் வந்து தங்களை மிரட்டியதாகவும் தனது வீட்டை புகைப்படும் எடுத்துச் சென்றாகவும் குற்றம்சாட்டியுள்ளார். அவர்கள் நீல நிற சீருடை அணிந்திருந்தனர்.

புகார்

இதற்கு மேல் புகார் கொடுக்கக் கூடாது என்றும் மிரட்டியதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில் இது போல் மாநகராட்சி ஊழியர்கள் மிரட்டுவது அண்மைக்காலமாக தொடங்கியுள்ளது. கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி எனது 156 வார்டில் கொசுத் தொல்லை குறித்து புகார் அளித்தேன்.

3 ஆண்டுகள்

சுமார் 3 ஆண்டுகளாக கொசுவை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனது தோட்டத்தில் சிறிது நேரம் கூட என்னால் நிற்க முடியவில்லை. அந்த அளவுக்கு கொசுக்கடி. இதை ஆன்லைன் வழியாக புகாராக தெரிவித்தேன். இதையடுத்து அடுத்த நாளே மாநகராட்சி ஊழியர் எனது வீட்டிற்கு வந்திருந்தார்.

புகார் கொடுக்க வேண்டாம்

அவர் என்னிடம், புகார் எல்லாம் கொடுக்காதீங்க. எதுவாக இருந்தாலும் என்னிடம் தனியாக சொல்லுங்கள் என கூறிய அவர் உங்களுக்கு தேவைப்பட்டால் கொசு வலைகளை வீட்டு ஜன்னலில் பொருத்திக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றார். தற்போது பைப்லைன் குறித்து புகார் கொடுத்ததற்கு என் வீட்டுக்கு வந்து எனது தாயை மிரட்டியுள்ளனர்.

விசாரணை

இதுகுறித்து மண்டலம் 12 இன் அதிகாரி எஸ் பாஸ்கரன் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், இந்த மிரட்டல் புகார் குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். நீல சீருடையில் வந்த 10 பேர் தன்னை மிரட்டியதாக புகார்தாரர் கூறுகிறார். ஆனால் எங்கள் குழுவினர் யாருமே நீல நிற சீருடையை அணிவதில்லை. அதே வேளையில் மழைநீர் வடிகாலில் கழிவுநீர் குழாய் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் விசாரித்து வருகிறோம் என்றார்.

English summary
Woman threatened for raising complaint on Chennai Corporation’s mobile app regarding sewage pipeline.

Source: https://tamil.oneindia.com/news/chennai/woman-threatened-for-raising-complaint-on-chennai-corporation-s-mobile-app-459617.html