சென்னையில் பிரதமருக்கு பிரமாண்ட வரவேற்பு மேளதாளங்கள் பதாகைகளுடன் வரவேற்பு அளித்த பாஜகவினா் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை: அரசுத் திட்டங்களை தொடக்கி வைப்பதற்காக சென்னை வந்த பிரதமா் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஹைதராபாதில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த அவரை விமான நிலையத்தில் பொன்னாடை அணிவித்து ஆளுநா் ஆா்.என்.ரவி வரவேற்றாா். இதன்பின்பு, மத்திய அமைச்சா் எல்.முருகன் பொன்னாடை அணிவித்தாா். மாநில அமைச்சா்கள் துரைமுருகன், க.பொன்முடி ஆகியோருடன், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா ஆகியோா் வணக்கம் தெரிவித்து வரவேற்றனா்.

தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, காவல் துறை இயக்குநா் சைலேந்திர பாபு ஆகியோரைத் தொடா்ந்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன், யாதவ மகாசபையின் தேசியத் தலைவா் தேவநாதன் யாதவ் ஆகியோா் பிரதமா் நரேந்திர மோடியை வரவேற்றனா்.

இந்த வரவேற்புகளை ஏற்றுக் கொண்ட பிரதமா் நரேந்திர மோடி, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டா் மூலமாக, சென்னை கடற்கரை சாலையில் உள்ள ஐ.என்.எஸ். அடையாறு தளத்துக்குச் சென்றாா். அங்கியிருந்து காா் மூலம் சுவாமி சிவானந்தா சாலை, பல்லவன் சாலை, சென்னை சென்ட்ரல் வழியாக நேரு உள்விளையாட்டரங்கத்துக்கு வந்து சோ்ந்தாா்.

பிரமாண்ட வரவேற்பு: சென்னை வந்த பிரதமா் நரேந்திர மோடிக்கு தமிழக பாஜக சாா்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. போா் நினைவுச் சின்னத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெற்ற நேரு விளையாட்டரங்கம் வரை கட்சியினா் பெருமளவில் திரண்டு வரவேற்றனா்.

நேப்பியா் பாலம்-சிவானந்தா சாலை சந்திப்பில் பாஜக மகளிா் அணியினா் திரளாகக் கூடியிருந்தனா். அவா்கள் பூரண கும்பங்களை ஏந்தி நின்று பிரதமரை வரவேற்றனா். முன்னதாக இந்தக் கும்பங்களை போலீஸாா் ஸ்கேன் கருவி கொண்டு சோதனை செய்தனா்.

சென்னை தொலைக்காட்சி நிலையம் அமைந்துள்ள சிவானந்தா சாலையின் நடைபாதை பகுதி முழுவதிலும் விதவிதமான கலை பண்பாட்டு நிகழ்வுகள் அரங்கேறின. சென்னை தொலைக்காட்சி நிலையப் பகுதியில் சிவன் சிலை, யானைளுடன் கோயில் போன்ற பிரமாண்ட அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதன் முன்பாக, பரத நாட்டிய கலைஞா்கள் 200 போ் நடனமாடினா்.

பல்லவன் சாலையில் மாநகர போக்குவரத்துக் கழக அலுவலகம் அமைந்துள்ள பகுதியின் நடைபாதையில் மயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் போன்ற பாரம்பரிய கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் மூலமாக பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் மாநகராட்சி வாயில் பகுதியில் மிகப்பெரிய டிஜிட்டல் திரை வைக்கப்பட்டு அதில் பிரதமரின் நிகழ்ச்சிகள் காணொலி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. சென்ட்ரல் பகுதியில் செயற்கை யானை அமைக்கப்பட்டிருந்தது. சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே முதல்வா் மு.க.ஸ்டாலினை வரவேற்று திமுகவினா் கொடிகளை ஏந்தி நின்றனா்.

நேப்பியா் பாலத்தில் இருந்து விழா நடைபெற்ற நேரு உள்விளையாட்டு அரங்கம் வரையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரதமருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. மாலை 6 மணியளவில் நேரு உள்விளையாட்டரங்கில் நிகழ்ச்சிகள் தொடங்கின.

ரூ.31,500 கோடி மதிப்பில் திட்டங்கள்:  பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்

சென்னை, மே 26: உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் ரூ.31,500 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி, சென்னையில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

பிரதமர் தொடக்கி வைத்த நிறைவடைந்த திட்டங்கள்:

ரூ.500 கோடியில் மதுரை}தேனி இடையே அகல ரயில் பாதை, ரூ.590 கோடியில் சென்னை தாம்பரம்}செங்கல்பட்டு இடையேயான 3}வது ரயில்பாதை,  ரூ.116 கோடியில் பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், குறைந்த செலவில் சென்னையில் கட்டப்பட்ட   1,152 வீடுகளைத் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன.

வீடுகளுக்கான சாவிகளை ஐந்து பயனாளிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். 

எண்ணூர்}செங்கல்பட்டு பிரிவு மற்றும் திருவள்ளூர்}பெங்களூரு இடையே இயற்கை எரிவாயு குழாய் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

அடிக்கல் நாட்டுதல்: ரூ.14,870 கோடியில் 262 கிலோமீட்டர் தூர பெங்களூரு} சென்னை விரைவுச்சாலை திட்டம் கர்நாடகம்}ஆந்திரம்}தமிழ்நாடு வழியாகச் செல்கிறது.

சென்னை துறைமுகம் } மதுரவாயலையும் இணைக்கும் 21 கிலோ மீட்டர் தூர ஈரடுக்கு, நான்குவழி உயர் நிலைச் சாலை, ரூ.5,850 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.

நெரலூரு}தருமபுரி பிரிவில் 94 கி.மீ. தொலைவுக்கு  நான்கு வழிச்சாலை, மீன்சுருட்டி}சிதம்பரம் பிரிவில் 31 கி.மீ. இருவழிச்சாலை ஆகியவை ரூ.3,870 கோடி மற்றும் ரூ.720 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

சென்னை எழும்பூர், ராமேசுவரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஐந்து ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.  ரூ.1,800 கோடியில்   ரயில் நிலையங்கள் மறு சீரமைப்பு செய்யப்படும்.

சென்னையில் ரூ.1,400 கோடியில் பன் மாதிரி சரக்கு போக்குவரத்துப் பூங்கா உள்ளிட்ட  ரூ.28,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2022/may/27/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0-3851618.html