சென்னையில் நடைபெற்று வரும் மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. அதன் ஒரு பகுதியாக சென்னையில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. ஊட்டி மலர் கண்காட்சிக்கு இணையாக சென்னையில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது.

பொதுமக்கள் மலர் கண்காட்சியை பார்வையிட காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.50-ம், மாணவர்களுக்கு ரூ.20-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியில் பெங்களூரு, கிருஷ்ணகிரி, உதகை, புனே, ஏற்காடு, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மலர் வகைகள் கொண்டு வரப்பட்டு காட்சிபடுத்தப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் மலர்களால் வடிவமைக்கப்பட்ட மயில், குதிரை, சிங்கம், கரடி, சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. கண்காட்சிக்கு வரும் மக்கள் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக செல்பி ஸ்பாட்டும் அமைக்கப்பட்டு உள்ளது.

மலர் கண்காட்சியில் பழங்களால் செதுக்கப்பட்ட கவிஞர் பாரதியார், முன்னாள் முதல்-அமைச்சர்கள் அறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் முகங்கள் சிற்பங்களும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முகத்தை போல் செதுக்கப்பட்ட பழமும் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கடந்த 3-ம் தேதி முதல் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் கண்கவர் மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் மலர் கண்காட்சியை பார்வையிட ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

சென்னை மக்களின் மன அழுத்தத்தைப் போக்கும் விதமாக இனி ஆண்டுதோறும் ஜூன் மூன்றாம் தேதி மலர் கண்காட்சி நடத்தப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Related Tags :

Source: https://www.dailythanthi.com/News/State/chennai-flower-exhibition-ends-today-715427