சென்னை: பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள் மீது வழக்குப்பதிவு! – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட மெட்ரோ ரெயில் நிலையம் அருகேயும், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரி வாயில் முன்பும் நேற்று ஏராளமான நர்சுகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ தேர்வு வாரியத்தின் தேர்வில் (எம்.ஆர்.பி) தேர்ச்சி பெற்று கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து பெரும்பாலான நர்சுகள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று காலை போராட்டம் நடத்தினர்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து நர்சுகள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். இதனால் பரபரப்பான அந்த சாலையில், போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் நிலை உருவானது.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகலவன் தலைமையிலான போலீசார் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அப்போது நர்சுகள் கோரிக்கைகளை வலியுறுத்தி உரத்த குரலில் கோஷம் எழுப்பினர். இதையடுத்து பெண் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளை கைது செய்ய முயன்றனர்.

அப்போது போலீஸ்-நர்சுகள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஆனாலும் பெண் போலீஸ், நர்சுகளுடன் மல்லுக்கட்டி அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று போலீஸ் வேன் மற்றும் பஸ்களில் ஏற்றினர். கைது செய்யப்பட்ட சுமார் 400 நர்சுகளும் அருகில் உள்ள சமுதாய நல கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.அவர்களின் கோரிக்கைய்ன் படி, பணி நிரந்தரம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்தார்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் 487 செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Related Tags :

Source: https://www.dailythanthi.com/News/State/case-registered-against-protestors-nurses-in-chennai-717699