சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தபேதார் முதல் பதிவாளர் வரை அனைத்துப் பதவிகளிலும் பெண்களை நியமித்ததன் மூலம், சென்னை உயர் நீதிமன்றம் எல்லா வகையிலும் சம வாய்ப்பு அளிக்கும் இடமாக மாறியுள்ளது. 2007ஆம் ஆண்டு முதல் மாவட்ட நீதிபதிகள் பிரிவில் இரண்டு பெண்கள் பதிவாளர் ஜெனரலாக பதவி வகித்திருந்தாலும், நீதிபதிகள் முன் செங்கோல் எடுத்து செல்லும் பணிக்கு பெண்கள் பணியமர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
தமிழ்நாட்டில் விரைவில் உயரும் ஆட்டோ கட்டணம்? புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா.. ஷாக் ஆகாதீங்க
தபேதார் பணி என்ன?
நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து, நீதிமன்ற அறைக்கு வரும்போது, அவர்களுக்கு முன், ‘தபேதார்’ என்பவர் கையில் ஒரு செங்கோலுடன் வருவது, காலம் காலமாக இருக்கும் வழக்கம். நீதிபதிகள் வரும் போது, முன்செல்லும் தபேதார்கள், வழியில் கூட்ட நெரிசல் இல்லாமல் வழி ஏற்படுத்தி தருவர். அதேபோல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி எந்த வேலையில் ஈடுபட்டாலும், அவர் செல்லும்போது , நீதிபதி முன் தபேதார் செல்வர். இந்த தபேதார் பணியில், இதுவரை ஆண்கள் மட்டுமே நியமினம் செய்யப்பட்டு வந்தனர்.
தபேதார் பணிக்கு தேர்வு செய்யப்படுவது எப்படி?
கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி 40 தபேதார் மற்றும் 310 அலுவலக உதவியாளர்கள், சமையல்காரர், ரூம் பாய், வாட்ச்மேன், நூலக உதவியாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை உயர்நீதிமன்றம் வெளியிட்டது. இந்தப் பணியில் ஈடுபடுவோருக்கு ரூ. 15 ஆயிரத்து 700 இல் இருந்து ரூ. 50 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க 8ஆம் வகுப்பு வரை படித்திருந்தாலே போதும். அவர்களுக்கான வயது 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆதரவற்ற கைம்பெண்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு 35 வயது தளர்வுகள் அளிக்கப்படுள்ளது. விண்ணப்பித்தவர்கள் அனைவரும் எழுத்துத் தேர்வு மூலமாகவும், பின்னர் நேர்காணல் வாயிலாகவும் தேர்வு செய்யப்படுவர்.
மாறிய வரலாறு
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றிலேயே, முதல் முறையாக திலானி என்ற பெண், தபேதாராக நியமினம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த சென்னை உயர் நீதிமன்ற பணியாளர்கள் நியமனத்தில், இவர் தேர்வு செய்யப்பட்டு, நீதிபதி மஞ்சுளாவிடம் பணிபுரிந்துவருகிறார். ஏற்கனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் வாகனங்கள் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு பணியில், பெண் ஓட்டுநர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்தவகையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அனைத்து நிலைகளிலும், பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவதாக ஊழியர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
பெண்களுக்கு மாறிய சீருடை
இதுநாள் வரை ஆண் தபேதார்கள் வெள்ளை நிற சட்டை, பேன்ட் அணிந்து, இடுப்பில் சிவப்பு பட்டையுடன், தலையில் சிவப்பு தலைப்பாகை அணிவர். ஆனாக் பெண்களுக்கு தபேதாரின் சீருடையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு வெள்ளை நிற சுடிதார் சீருடையாக வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி இடுப்பில் பட்டையும், தலையில் தலைப்பாகையையும் கொடுக்கப்பட்டுள்ளது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/history-changed-in-madras-high-court-first-women-mace-bearer-appointed-in-court-461629.html