5000 ச.கி.மீட்டராக குறைப்பு: 2 மாதங்களில் விரிவாக்கம் செய்யப்படுகிறது சென்னை பெருநகர் எல்லை – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் எல்லைகளை விரிவாக்கம் செய்வது தொடர்பான உத்தரவு 2 மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் பரப்பளவு தற்போது 1,189 சதுர கிலோ மீட்டராக உள்ளது. இதில் சென்னை மாநகராட்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 16 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் உள்ளன.

இந்நிலையில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் எல்லை விரிவாக்கம் செய்யப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு அறிவித்தது.

இதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணத்தின் ஒரு பகுதியையும் சேர்த்து, சென்னை பெருநகர பகுதி 8,878 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இதையொட்டி செங்கல்பட்டு மற்றும் அரக்கோணத்தில் பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், சென்னை பெருநகர் பகுதி விரிவாக்க திட்டத்தை 8,000 சதுர கிலோ மீட்டரில் இருந்து 5,000 சதுர கிலோ மீட்டராக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “சென்னை பெருநகர் பகுதியை விரிவாக்கம் செய்ய செங்கல்பட்டு மற்றும் அரக்கோணத்தில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தக் கருத்து கேட்பு கூட்டங்களின் அடிப்படையில் விரிவாக்க திட்டத்தை 8,000 சதுர கிலோ மீட்டரில் இருந்து 5,000 சதுர கிலோ மீட்டராக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2 மாதங்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/812542-chennai-metropolitan-boundary-5-thousand-sq-km.html