சென்னை, செங்கல்பட்டு மக்களே பாருங்கள்.. புரிந்துகொள்ளுங்கள் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை, செங்கல்பட்டு மக்களே பாருங்கள்.. புரிந்துகொள்ளுங்கள்

சென்னை: நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாடு முழுவதும் என்றால், அனைத்து மாநிலங்களிலும் அல்ல. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும்தான்.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆண்கள் 137, பெண்கள் 112 என மொத்தம் 249 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

அதிகபட்சமாக சென்னையில் 124 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 57 ஆயிரத்து 382 ஆக அதிகரித்தது. இதுவரை 34 லட்சத்து 18 ஆயிரத்து 025 போ் குணமடைந்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 148 போ் குணமடைந்துள்ளனா். தமிழகம் முழுவதும் 1,332 போ் சிகிச்சையில் உள்ளனா்; உயிரிழப்பு ஏதுமில்லை. தமிழகத்தில் சனிக்கிழமை கரோனா தொற்று பாதிப்பு 217 ஆகவும், சென்னையில் 111 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் குறித்த மாவட்ட அளவிலான அட்டவணையை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்திலேயே சென்னை மற்றும் செங்கல்பட்டில்தான் கரோனா பரிசோதனை செய்து, அதில் தொற்று உறுதி செய்யப்படுவோரின் விகிதமானது முறையே 4.3 மற்றும் 4.4 ஆக உள்ளது. அதற்கடுத்த இடத்தில் கோவை உள்ளது. அங்கு 2.0 ஆக உள்ளது. மற்ற மாவட்டங்களில் 0.2 முதல் 1.8 வரையில் அமைந்துள்ளது.

எனவே, தமிழகத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கரோனா உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகமாக உள்ளது என்பதால், இந்த மாவட்ட மக்கள், நிச்சயமாக அதிக விழிப்புணர்வுடன் இருந்து தொற்றுப் பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.
 

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/jun/13/chennai-chengalpattu-people-look-understand-3861284.html